சீன அதிபர் ஆண்டிறுதியில் அமெரிக்காவுக்கு வருகை அளிப்பார்: டிரம்ப்

சீன அதிபர் ஆண்டிறுதியில் அமெரிக்காவுக்கு வருகை அளிப்பார்: டிரம்ப்

2 mins read
5a3323a2-38fc-45b3-923f-d83a4b49d2cb
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (இடம்), சீன அதிபர் ஸி ஜின்பிங் இருவரும் தென்கொரியாவின் பூசான் நகரில் சென்ற ஆண்டு (2025) அக்டோபர் 30ஆம் தேதி ஏபெக் மாநாட்டில் கலந்துகொண்டபோது எடுக்கப்பட்ட படம். - படம்: நியூயார்க் டைம்ஸ்

வா‌ஷிங்டன்: சீன அதிபர் ஸி ஜின்பிங் இவ்வாண்டு (2026) இறுதியில் வெள்ளை மாளிகைக்கு வருகை அளிப்பார் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியிருக்கிறார்.

உலகின் ஆகப் பெரிய இரண்டு பொருளியல் நாடுகளும் வர்த்தகப் போருக்கு இடையே உறவைச் சீர்செய்ய முயல்வதை அது காட்டுகிறது.

என்பிசி செய்திக்கு இம்மாதம் (பிப்ரவரி) நான்காம் தேதி அளித்த நேர்காணலின்போது திரு டிரம்ப் அந்தத் தகவலை வெளியிட்டார். அதே நாள் தலைவர்கள் இருவரும் பல்வேறு விவகாரங்கள் குறித்துத் தொலைபேசியில் உரையாடினர். வர்த்தகம், தைவான், உக்ரேனில் ர‌‌ஷ்யா நடத்தும் போர், ஈரானிய நிலைமை முதலியவை அவற்றுள் அடங்கும்.

திரு ஸி அமெரிக்கா செல்லும் முன்னர், திரு டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“அமெரிக்காவும் சீனாவும் உலகின் ஆகச் சக்திவாய்ந்த இரண்டு நாடுகள். எங்களுக்கு இடையில் மிகவும் நல்ல உறவு நிலவுகிறது,” என்றார் திரு டிரம்ப்.

ஓராண்டுக்கு முன்னர் திரு டிரம்ப், வெள்ளை மாளிகைக்கு மீண்டும் அதிபராகத் திரும்பிய பிறகு, துறை வாரியாகப் பல்வேறு வரிகளை விதித்தார். கொள்கை இலக்குகளை எட்டுவதற்காக எஃகு, மோட்டார்வாகனத் துறைகளில் அவர் அதிகத் தீர்வைகளை அறிவித்தார்.

தொடக்கத்தில் பெய்ஜிங்குடன் வர்த்தக மோதலில் இறங்கிய வெள்ளை மாளிகை, பின்னர் பரந்த அடிப்படையில் இணக்கம் கண்டது.

சீன உற்பத்தித் துறையைச் சார்ந்திருக்கும் போக்கைக் குறைக்க முயல்கிறது அமெரிக்கா. ஆயினும் இரண்டு பொருளியல்களும் தொடர்ந்து பின்னிப் பிணைந்துள்ளதாகக் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

தைவானுக்கு ஆயுதங்கள் வழங்குவதைக் கவனத்துடன் கையாளுமாறு திரு டிரம்ப்பைத் திரு ஸி எச்சரித்தார். தைவானைத் தனது சொந்த நிலப்பகுதியாகக் கருதுகிறது சீனா.

ஆயினும் வர்த்தகம் உள்ளிட்ட இருதரப்பு விவகாரங்களில் இணக்கம் காணமுடியும் என்று சீன அதிபர் நம்பிக்கை தெரிவித்தார்.

இதற்கிடையே திரு டிரம்ப், திரு ஸியுடன் நடத்திய உரையாடல் மிகவும் சிறப்பாய் இருந்ததாகவும் அதனை அதே நிலையில் வைத்திருப்பது எவ்வளவு முக்கியம் என்பதை இருவரும் உணர்ந்திருப்பதாகவும் கூறினார்.

அணுவாயுதங்களுக்குப் புதிய வரம்புகளை விதிப்பது குறித்து ர‌‌ஷ்யாவுடனும் சீனாவுடனும் பேச்சு நடத்த விரும்புவதாக வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 6) அமெரிக்கா கூறியிருந்தது. ஆனால் தற்போதைய நிலையில் ஆயுதக்களைவு பற்றிய பேச்சில் கலந்துகொள்வதைப் பெய்ஜிங் நிராகரித்துவிட்டது.

குறிப்புச் சொற்கள்