டியான்ஜின்: சீன அதிபர் ஸி ஜின்பிங், உலக நாடுகள் சில, மற்ற நாடுகளைச் சிறுமைப்படுத்தும் போக்கைக் கடுமையாகச் சாடியுள்ளார்.
வட்டார ரீதியான உறவுகளை வலுப்படுத்துவதில் தன்னை முன்னிறுத்திக்கொள்ள முயலும் சீனா, திங்கட்கிழமை (செப்டம்பர் 1) ஐரோப்பிய, ஆசிய, யூரேசியத் தலைவர்களை ஷாங்காய் கூட்டுறவு அமைப்பு மாநாட்டில் ஒன்றுகூட்டியது.
சீனா, இந்தியா, ரஷ்யா, பாகிஸ்தான், ஈரான், கஸக்ஸ்தான், கிரிகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பெலருஸ் ஆகிய நாடுகளை உள்ளடக்கியது ஷாங்காய் கூட்டுறவு அமைப்பு.
அமைப்பின் மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின், பெலருஸ் அதிபர் அலெக்சண்டர் லுகாஷெங்கோ உள்ளிட்ட அனைத்துலக தலைவர்கள் பங்கேற்றனர்.
அவர்களிடம், அனைத்துலக சூழல் இன்னும் குழப்பமானதாக மாறிவிட்டதாய் திரு ஸி கூறினார்.
அமெரிக்காவை மறைமுகமாகக் குறிப்பிட்டு ஒரு சில நாடுகள் மற்ற நாடுகளைச் சிறுமைப்படுத்தும் போக்கை வன்மையாகக் கண்டிப்பதாகவும் திரு ஸி குறிப்பிட்டார்.
“உறுப்பு நாடுகள் எதிர்நோக்கும் பாதுகாப்பு மேம்பாட்டுப் பணிகள் இன்னும் சிக்கலானதாகியுள்ளது,” என்று டியன்ஜின் துறைமுகத்தில் நடைபெற்ற மாநாட்டில் திரு ஸி சொன்னார்.
“கொந்தளிப்பையும் உருமாற்றத்தையும் கடந்துசெல்லும் உலகில் நாம் ஷாங்காய் உணர்வைத் தொடர்ந்து பின்பற்றவேண்டும். அமைப்பின் செயல்பாடுகளை இன்னும் திறம்பட மேற்கொள்ளவேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
சீனா, இவ்வாண்டு இரண்டு பில்லியன் யுவென் (S$360 மில்லியன்) மதிப்புள்ள இலவச நிதியை உறுப்பு நாடுகளுக்கு வழங்கவிருக்கிறது. ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் வங்கி கூட்டமைப்புக்குக் கூடுதலாக 10 பில்லியன் யுவென் வழங்கப்படும் என்று திரு ஸி அறிவித்தார்.
அமைப்பின் பங்காளி நாடுகள் விரிசலையும் மோதல்களையும் எதிர்க்கும்படி கேட்டுக்கொண்ட திரு ஸி, பலதரப்பு வர்த்தகக் கட்டமைப்புகளுக்கு ஆதரவை வலுப்படுத்தும்படி வலியுறுத்தினார்.
திரு புட்டின், திரு லுகாஷெங்கோ ஆகியோருடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் சிவப்புக் கம்பள வரவேற்பில் கலந்துகொண்டார்.
திரு ஸி, திரு புட்டின், திரு மோடி ஆகிய மூவரும் மொழிபெயர்ப்பாளரின் உதவியுடன் கலந்துபேசுவதையும் காண முடிந்தது.
சீனாவின் ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் மாநாடு ஆகஸ்ட் 31ஆம் தேதி தொடங்கியது. இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்து 80 ஆண்டுகள் நிறைவடைந்ததை மாபெரும் ராணுவ அணிவகுப்புடன் சீனா கொண்டாடியதை அடுத்து மாநாடு இடம்பெற்றது.