மியன்மாரில் உள்ள மோசடி நிலையங்களிலிருந்து நாடுகடத்தப்படும் சீனர்கள்

2 mins read
2707b21a-fc5a-4761-ba21-30af5221cd19
மோசடி நிலையங்களில் வேலை செய்த ஊழியர்களை அழைத்துச் செல்லும் பேருந்து. - படம்: ஏஎஃப்பி

மெய் சோட் (தாய்லாந்து): மியன்மாரில் மோசடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிலையங்களில் பணியாற்றிய நூற்றுக்கணக்கான சீன ஊழியர்கள் வியாழக்கிழமையன்று (பிப்ரவரி 20) சீனாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.

சட்டவிரோத நடவடிக்கைகளை அதிகாரிகள் முறியடித்து வருவதைத் தொடர்ந்து அவர்கள் சீனாவுக்கு அனுப்பப்படுகின்றனர்.

மியன்மாரில் உள்ள மோசடி நிலையங்களிலிருந்து, வரும் வாரங்களில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர் விடுவிக்கப்பட்டு அவரவர் நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் அடுத்த மூன்று நாள்களில் 600 சீனர்கள் திருப்பி அனுப்பப்படுவர்.

மியன்மாரில் உள்ள இதுபோன்ற மோசடி நிலையங்களைக் குற்றக் கும்பல்கள் நடத்துகின்றன. அவற்றில் உள்ள ஊழியர்கள் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள்.

தாங்கள் கடத்தப்பட்டு வலுக்கட்டாயமாக இணைய மோசடிச் செயல்களில் ஈடுபடுத்தப்பட்டதாக அந்த ஊழியர்களில் பெரும்பாலோர் தெரிவித்திருக்கின்றனர். அத்தகைய இணைய மோசடிகள் மூலம் உலகம் முழுவதும் மக்களிடமிருந்து பணம் பறிக்கப்பட்டு வருகிறது.

இதுபோன்ற மோசடி நிலையங்களில் வேலை செய்வோரில் பலர் சீனாவைச் சேர்ந்தவர்கள். அதனால் மோசடி நிலையங்களை இழுத்து மூடுமாறு பெய்ஜிங், மியன்மாருக்கும் தாய்லாந்துக்கும் நெருக்குதல் அளித்து வருகிறது.

முதற்கட்டமாக இரண்டு ஈரடுக்குப் பேருந்துகள் திருப்பி அனுப்பப்படும் ஊழியர்களை தாய்லாந்தின் மெய் சோட் நகருக்கு வியாழக்கிழமை காலை அழைத்துச் சென்றன. அந்நகரம், தாய்லாந்து-மியன்மார் எல்லைப் பகுதியில் உள்ளது.

நாடுகடத்தப்பட்ட அனைவரும் ஆண்கள் என்று நம்பப்படுகிறது. அவர்கள் பேருந்துகளிலிருந்து இறங்கியவுடன் அவர்களுக்கென ஏற்பாடு செய்யப்பட்ட ‘சைனா சவுத்தர்ன்’ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் ஏறினர்.

சீனாவின் நான்ஜிங் நகரிலிருந்து வந்த அந்த விமானம், உள்ளூர் நேரப்படி காலை 11.30 மணியளவில் நாடுகடத்தப்படுபவர்களுடன் புறப்பட்டது. அவ்விமானம் ஸி‌‌ஷுவாங்பன்னா நகருக்குச் சென்றது.

மேலும் 200 சீனர்களை வியாழக்கிழமையன்று திருப்பி அனுப்பத் திட்டமிடப்பட்டதாக தாய்லாந்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். மெய் சோட்டிலிருந்து தங்கள் நாட்டவர் 600 பேரை அழைத்துவர சீனா அடுத்த முன்று நாள்களில் 16 சிறப்பு விமானச் சேவைகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

குறிப்புச் சொற்கள்