கல்வித் துறைக்கு விரைவில் மூடுவிழா: டிரம்ப் விரைவில் உத்தரவு பிறப்பிக்க திட்டம்

2 mins read
b8f5c8a6-4b29-4c05-be23-799b4719b605
அமெரிக்காவில் மத்திய அரசாங்கத்தின் கட்டடத்திற்கு வெளியே பறக்கும் கல்வித்துறையின் கொடி. இந்தத் துறை விரைவில் மூடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: அமெரிக்காவின் கல்வித் துறையை மூடும் நிர்வாக உத்தரவில் அதிபர் டோனல்ட் டிரம்ப் விரைவில் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மார்ச் 6ஆம் தேதிக்கு முன்பே உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என்று வால் ஸ்திரீட் ஜர்னல் நாளேட்டுத் தகவல் தெரிவித்தது.

இந்த விவகாரம் குறித்து வெள்ளை மாளிகை, கல்வித் துறையுடன் தொடர்புகொண்டு கருத்து கேட்டபோது உடனடியாகப் பதிலில்லை.

கல்வித் துறையை மூட வேண்டும் என்று திரு டோனல்ட் டிரம்ப் நீண்டகாலமாகவே கோரிக்கை விடுத்து வருகிறார். அது, ஒரு ஏமாற்று வேலை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திரு டிரம்ப் தமது முதல் தவணைக்காலத்திலேயே கல்வித் துறையை மூடத் திட்டமிட்டார். ஆனால் இதற்கு ஏகோபித்த ஆதரவு கிடைக்கவில்லை.

மார்ச் 3ஆம் தேதி கல்வி அமைச்சரான லிண்டா மெக்மாஹான், கல்வித் துறையை மூட விரும்பும் டிரம்ப்பின் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.

ஆனால் டிரம்ப்பின் திட்டத்தை எதிர்ப்பவர்கள், பொதுக் கல்வியை உயர்தரத்தில் வைத்திருப்பதற்கு கல்வித் துறை முக்கியம் என்று கூறியுள்ளனர். உடனடியாக அது மூடப்படுவதால் கே-12 பள்ளிகளுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் நிதியுதவி பாதிக்கப்படும் என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.

டிரம்ப்பும் அவரது ஆலோசகருமான செல்வந்தர் இலோன் மஸ்க்கும் நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் இல்லாமல் பல அரசாங்கத் திட்டங்களையும் அமைப்புகளையும் கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதன் முதல் கட்டமாக அமைச்சின் தகுதியில் உள்ள கல்வித் துறைக்கு இலக்கு வைக்கப்பட்டுள்ளது.

அந்தத் துறை, நாட்டில் உள்ள 100,000 பொது, 35,000 தனியார் பள்ளிகளை மேற்பார்வையிடுகிறது. இருந்தாலும், அவற்றில் 85 விழுக்காட்டுப் பள்ளிகளுக்கு மாநில, உள்ளூர் அரசாங்கத்திடமிருந்து நிதி கிடைத்து வருகிறது.

பல்கலைக்கழக கட்டணங்களைச் செலுத்த முடியாத மில்லியன்கணக்கான மாணவர்களின் 6.1 டிரில்லியன் டாலர் மாணவர் கடனையும் அது நிர்வகித்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்