மணிலா: பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவுக்கு அருகே கட்டுமானப் பணிகள் நடந்துவந்த ஒன்பது மாடி கட்டடம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை (மே 24) அதிகாலை திடீரென இடிந்து விழுந்தது.
கட்டட இடிபாடுகளுக்குள் 19 ஊழியர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மணிலாவுக்கு வடக்கே உள்ள ஏஞ்சல்ஸ் நகரில் மே 24ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் இந்த விபத்து நடந்தது. கட்டடத்தின் சுவர்களும் சாரக்கட்டுகளும் சுமை தாங்காமல் சரிந்து விழுந்ததால், அங்குப் பணியாற்றிய ஊழியர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அந்நகரத் தகவல் அதிகாரி ஜே பெலாயோ தெரிவித்தார்.
தற்போதைய நிலவரப்படி உயிரிழப்புகள் எதுவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
எனினும், அந்தப் பகுதியில் வழக்கமாகப் பணியாற்றும் 19 ஊழியர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இடிபாடுகளை அகற்றுவதற்குக் கனரக இயந்திரங்கள் தேவைப்படுகின்றன என்றும் இதுவே தற்போதைய மீட்பு நடவடிக்கைக்குப் பெரும் சவாலாக உள்ளது என்றும் திரு பெலாயோ குறிப்பிட்டார்.
முதற்கட்டத் தகவல்களின்படி, இடிபாடுகளிலிருந்து 24 பேரும் கட்டடம் சரிந்ததில் பாதிக்கப்பட்ட ஓர் அடுக்குமாடி உல்லாச விடுதியிலிருந்து இருவரும் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேடப்பட்டுவரும் 19 ஊழியர்களும் இந்த மீட்பு எண்ணிக்கைக்குள் அடங்கியிருப்பார்கள் என நம்புவதாகவும் உயிர்பிழைத்தவர்களின் அடையாளங்களைச் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் கூறினர்.
தொடர்புடைய செய்திகள்
கட்டடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என ஏஎஃப்பி செய்தி நிறுவனம் கூறியது.

