தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சட்டவிரோதக் குடியேறிகளைத் திரும்பப் பெற கொலம்பியா இணக்கம்: வெள்ளை மாளிகை

1 mins read
d1fc4196-5474-4add-ac84-81f286ce82ef
கொலம்பிய அதிபர் குஸ்டவோ பெட்ரோ, அமெரிக்காவிலிருந்து ராணுவ விமானங்கள் மூலம் கொலம்பியர்கள் திருப்பி அனுப்பப்படும் திட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியிருந்தார். - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: கொலம்பியா அதன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, அமெரிக்காவிலிருந்து ராணுவ விமானங்கள் மூலம் கொலம்பியர்கள் திருப்பி அனுப்பப்படுவதை ஏற்றுக்கொள்ள இணங்கியிருப்பதாக வெள்ளை மாளிகை, ஜனவரி 26ஆம் தேதி கூறியுள்ளது.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் பேரளவில் தடைகள் விதிக்கப்படும் என்று மிரட்டியதைத் தொடர்ந்து கொலம்பியா அவ்வாறு இணங்கியதாகக் கூறப்படுகிறது.

வெள்ளை மாளிகையின் அறிவிப்பைக் கொலம்பியா உடனடியாக உறுதி செய்யவில்லை.

கொலம்பியா மீது வரிகளும் தடைகளும் விதிக்கும் திட்டத்தை நிறுத்திவைக்கப் போவதாக வெள்ளை மாளிகை கூறியது.

“சட்டவிரோதமாகக் குடியேறிய கொலம்பியர்கள் அனைவரையும் எந்தக் கட்டுப்பாடுமின்றி ஏற்றுக்கொள்ள கொலம்பியா ஒப்புக்கொண்டுள்ளது. அவர்கள் அமெரிக்க ராணுவ விமானங்களில் அனுப்பப்படுவதற்கும் எவ்விதக் கட்டுப்பாடோ தாமதமோ இன்றி கொலம்பியா இணங்கியுள்ளது,” என்று வெள்ளை மாளிகையின் அறிக்கை குறிப்பிட்டது.

“அமெரிக்கா மீண்டும் மதிக்கப்படுவதை இன்றைய நிகழ்வுகள் காட்டுகின்றன,” என்றும் அது கூறியது.

“அதிபர் டிரம்ப் தொடர்ந்து நம் நாட்டின் இறையாண்மையைத் தீவிரமாகப் பாதுகாப்பார். உலக நாடுகள் அனைத்தும் அமெரிக்காவிலிருந்து, சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் அவற்றின் குடிமக்கள் திருப்பி அனுப்பப்படுவதை ஏற்றுக்கொள்வதில் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார்,” என்றும் அந்த அறிக்கை சொன்னது.

முன்னதாக, கொலம்பிய அதிபர் குஸ்டவோ பெட்ரோ அமெரிக்காவிலிருந்து ராணுவ விமானங்கள் மூலம் கொலம்பியர்கள் திருப்பி அனுப்பப்படும் திட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியது திரு டிரம்ப்பைச் சினமடையச் செய்தது.

குடியேறிகளைத் திரும்பப் பெறுவோம், ஆனால் ‘கௌரவமாக’, சாதாரண விமானங்களில் அவர்கள் அனுப்பப்பட வேண்டும் என்று கொலம்பிய அதிபர் கூறியிருந்தார்.

குறிப்புச் சொற்கள்