தென்சீனக் கடலில் ஒத்துழைப்பு: சீனாவில் இந்தோனீசியா பேச்சுவார்த்தை

தென்சீனக் கடலில் ஒத்துழைப்பு: சீனாவில் இந்தோனீசியா பேச்சுவார்த்தை

படம்: இபிஏ

20 Nov 2026 - 5:48 pm

2 mins read

ஜகார்த்தா: இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ, சீன அதிபர் ஸி ஜின்பிங்கை வெள்ளிக்கிழமை (நவம்பர் 20) ஷென்சென் நகரில் சந்தித்துப் பேச்சுவார்த்தைகள் நடத்தினார்.

அண்மையில் அந்நகரில் நடந்துமுடிந்த ஆசிய பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு மாநாட்டுக்குப் பிறகு (ஏபெக்) இந்த இருநாடுகளின் தனிப்பட்ட சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

தென்சீனக் கடலில் உத்திபூர்வ பங்காளித்துவம் உட்பட்ட இணைந்த இருநாட்டு மேம்பாட்டுக்கான சாத்தியங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக இந்தோனீசிய அதிபரின் அலுவலகம் அன்றையதினம் விவரங்களை வெளியிட்டுள்ளது.

“எங்களது உறவு வலுவாக வளர்ந்துவருகிறது என்று நாங்கள் எண்ணுகிறோம். இருநாடுகளுக்கும் இடையே ஒருங்கிணைந்த புரிந்துணர்வு எட்டப்பட்டுள்ளது,” என்று இந்தோனீசிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தென்சீனக் கடலை நேரடியாகக் குறிப்பிடாமல் இருநாட்டுக் கடல்துறைகளின் மேம்பாட்டில் நேர்மறை முன்னேற்றம் அடைந்துள்ளதை இந்தோனீசிய அதிபர் ஏற்றுக்கொண்டதாக சீன அரசாங்க ஊடகமான ஷின்ஹுவா தெரிவித்தது.

அண்மைய காலமாக தென்சீனக் கடலில் சீனாவுடன் இந்தோனீசியா ஏற்படுத்திய ஒத்துழைப்பு உடன்பாடுகள் அவ்வட்டார நாடுகளுக்குப் பதற்றத்தை ஏற்படுத்திவந்தது.

அக்கடல் பகுதியில் உள்ள பல நாடுகளின் எல்லைகளுக்குட்பட்ட இடங்களை சீனா சொந்தம் கொண்டாடிவருவது அதற்கான முக்கிய காரணமாகும். அதனை இந்தோனீசியா ஏற்றுக்கொள்வதைப்போல சீனாவுடனான அதன் ஒத்துழைப்பு அமையுமோ என அந்நாடுகள் அஞ்சுகின்றன.

மேலும் கடந்த 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சீனா சென்றிருந்தபோது, அந்நாட்டுடன் இந்தோனீசிய அதிபர் பிரபோவோ செய்த கடல்துறை மேம்பாட்டுக்கான இருநாட்டு உடன்பாடு சர்ச்சையைக் கிளப்பியது.

தென்சீனக் கடலில் ‘உரிமைகோரப்படும் பகுதியில்’ இந்தோனீசியாவுடனான இணை மேம்பாட்டுத் திட்டங்கள் என்ற குறிப்போடு ஒப்பந்தம் குறித்த விவரங்கள் அப்போது வெளியிடப்பட்டன.

அந்த வார்த்தைகள் இந்தோனீசியாவிலும் பதற்றத்தைக் கிளப்பியது. இந்தோனீசியா தென்சீனக் கடலில் எவ்வித உரிமையையும் நீண்டநாள்களாகக் கோராத நாடாகும்.

அதேவேளையில் அப்பகுதிக் கடலில் அதன் இறையாண்மையைக் கொண்டு அங்குள்ள இயற்கை வளங்களை பயன்படுத்திக்கொள்ளவும் தனிப்பட்ட பொருளியல் மண்டலங்களை அமைத்துக்கொள்வதையும் சீனாவுடன் செய்யப்பட்ட ஒப்பந்தம் கட்டுப்படுத்தும் என்று ஆய்வாளர்கள் கருத்துரைத்தனர்.

அச்சர்ச்சைக்குப் பிறகு சீனாவின் தென்சீனக் கடல் சார்ந்த உரிமை கோரல்களை இந்தோனீசியா ஏற்றுக்கொள்ளாது எனவும் அதிபர் பிரபோவோ இந்தோனீசியாவின் இறையாண்மையை எப்போதும் பாதுகாப்பார் என்றும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியது.

குறிப்புச் சொற்கள்