கோத்தா கினபாலு: மலேசியாவின் சாபா மாநிலத்தில் கடந்த திங்கட்கிழமை (ஜூலை 7) ஆற்றில் மீன் பிடிக்கச் சென்ற பெண் எதிர்பாராவிதமாக முதலையைப் பிடித்ததாகக் கூறப்படுகிறது.
திங்கட்கிழமை இரவு 10.30 மணியளவில், மீனுக்கு வீசிய வலையை இழுத்துப் பார்த்த அப்பெண், மூன்று மீட்டர் நீளத்தில் உப்புநீர் முதலை சிக்கியிருப்பதைக் கண்டு அதிர்ந்தார்.
அவரது கூக்குரலைக் கேட்டு அருகிலிருந்த கிராமத்து மக்கள் உதவிக்கு ஓடிவந்தனர்.
கிட்டத்தட்ட 300 கிலோகிராம் எடையுள்ள முதலையை அனைவரும் கூடி கரைக்கு இழுத்து வந்தனர்.
அந்தப் பெண் பின்னர் அவசர உதவிச் சேவைக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டதாக மலேசியக் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள், பாதுகாப்பு கருதி முதலையின் கண்களைப் போர்வையால் மறைத்து, அதன் கால்களைக் கயிற்றால் பிணைத்ததாகக் கூறப்பட்டது.
சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை. அந்த முதலை பின்னர் சாபா வனவிலங்குத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆறுகள் அல்லது அவற்றின் முகத்துவாரங்களுக்கு அருகே செல்வோர் விழிப்புடன் இருக்கும்படி ஆலோசனை கூறப்பட்டுள்ளது.