கொழும்பு: குளத்தில் குளிக்கச் சென்ற 12 வயது மாணவனை முதலை இழுத்துச் சென்ற நிலையில், பல மணி நேரத் தேடுதலுக்குப் பின் அவரது உயிரற்ற உடல் மீட்கப்பட்டது.
இலங்கையின் கல்கிரியாகம பகுதியிலுள்ள வம்பட்டுவெவ குளத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 23) இச்சம்பவம் நிகழ்ந்தது.
சதீவ் தாம்ஸ்ரீ வர்ணசூரிய என்ற அச்சிறுவன் அங்கிருந்த ஒரு பள்ளியில் எட்டாம் நிலையில் படித்து வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ நாளன்று மாலையில் பெண் ஒருவருடன் அம்மாணவன் அக்குளத்திற்குச் சென்றார். அப்போது, குளிப்பதற்கான பகுதியில், நீரில் மூழ்கி இருந்த படியில் அவர் அமர்ந்திருந்தபோது, முதலை திடீரெனப் பாய்ந்து அவரை இழுத்துச் சென்றதாக ‘டெய்லி மிரர்’ செய்தி கூறியது.
தகவலறிந்ததும் விரைந்துசென்ற உள்ளூர்வாசிகள் சிறுவனைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆயினும், குளத்தில் நீர் அதிகமாக இருந்ததால் அது அவ்வளவு எளிதாக இல்லை.
அதனால், அகழ்பொறி கொண்டு குளத்தின் கரை சற்று உடைக்கப்பட்டு, நீர் வெளியேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மறுநாள் காலையில் சிறுவனின் உடல் மீட்கப்பட்டது.
வம்பட்டுவெவ குளத்தில் முதலை தாக்கி சிறுவன் உயிரிழந்தது இது இரண்டாவது முறை.
இன்னொரு சம்பவத்தில், முதலைத் தாக்குதலுக்கு ஆளான பெரியவர் ஒருவர் தமது கையின் ஒரு பகுதியைப் பறிகொடுத்ததாகக் கூறப்பட்டது.
ஒரே குளத்தில் தொடர்ச்சியாக முதலைத் தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியிருப்பது அக்குளத்தைப் பயன்படுத்துவோரிடையே அச்சம் எழுந்துள்ளது.
இதனிடையே, முதலை தாக்கி சிறுவன் மாண்டது தொடர்பில் காவல்துறை வழக்கு பதிந்து விசாரணை நடத்திவருகிறது.
