வார்சா: மத்திய, கிழக்கு ஐரோப்பாவை ‘போரிஸ்’ புயல் புரட்டிப்போட்டுள்ளது.
புயல் காரணமாக அங்கு கனமழை, வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
போலந்தில் வெள்ளத்தில் மூழ்கி ஒருவர் மாண்டுவிட்டதாக செப்டம்பர் 15ஆம் தேதியன்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆஸ்திரியாவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோரை மீட்க விரைந்த தீயணைப்புப் படை அதிகாரி ஒருவர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
செப்டம்பர் 12ஆம் தேதியிலிருந்து ஆஸ்திரியா, செக் குடியரசு, ஹங்கேரி, ருமேனியா, சிலோவாக்கியா ஆகிய நாடுகளில் பலத்த காற்று வீசுவதுடன் வழக்கத்துக்கு மாறாகக் கனமழை பெய்துவருகிறது.
கனமழை காரணமாக வெள்ளம் கரைபுரண்டோடுவதாகவும் சாலைகளும் குடியிருப்புப் பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கிவிட்டதாகவும் அதிகாரிகள் கூறினர்.
இதனால் பொதுப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
பல இடங்களில் மின்சாரம் இன்றி மக்கள் தவிக்கின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
ருமேனியாவில் தோள்பட்டை உயரத்துக்கு வெள்ளநீர் இருப்பதாகக் கூறப்படுகிறது.
போலந்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் பள்ளிக் கட்டடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், செப்டம்பர் 15ஆம் தேதி நிலவரப்படி, ‘போரிஸ்’ புயல் காரணமாக மாண்டோர் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது.
மத்திய, கிழக்கு ஐரோப்பாவில் வெள்ளம் கரைபுரண்டோடும் இடங்களிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
செப்டம்பர் 15ஆம் தேதி நிலவரப்படி ருமேனியாவில் வெள்ளம் காரணமாக ஆறு பேர் மாண்டுவிட்டனர்.
ஒருவரைக் காணவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.
செக் குடியரசில் நால்வரைக் காணவில்லை என்றும் அவர்களைத் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

