இந்தியாவுடனான உறவில் முள்ளாக தலாய் லாமா: சீனா தாக்கு

2 mins read
19379b4e-5c24-49c1-96cd-1729ce4dd743
தலாய் லாமாவின் 90வது பிறந்தநாள் கொண்டாட்டக் காட்சி. அடுத்த தலாய் லாமாவைத் தேர்ந்தெடுக்கும் உரிமை தனக்கு உள்ளதாகச் சீனா தொடர்ந்து கூறி வருகிறது. - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவின் பதவியேற்பு, இந்திய சீன உறவுகளுக்கு முள்ளாய் இருப்பதாகப் புதுடெல்லியிலுள்ள சீனத் தூதரகம் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 13) தெரிவித்தது.

2020ல் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நிலவிய எல்லை மோதல்களுக்கு அடுத்து வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெயசங்கர் முதன்முறையாக சீனா செல்லத் தயாராகும் நிலையில் சீனத் தரப்பு இவ்வாறு கூறியுள்ளது. அந்த எல்லைத் தாக்குதல்களில் 20 இந்திய ராணுவ வீரர்களும் நான்கு சீன வீரர்களும் உயிரிழந்தனர்.

ஜூலை 6ஆம் தேதி தரம்சாலாவில் நடைபெற்ற தலாய் லாமாவின் 90வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது தமக்கு அடுத்து பதவி ஏற்பவர் பற்றிய விவகாரத்தில் சீனாவுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று அவர் கூறினார்.

ஆனால் அடுத்த தலாய் லாமாவின் தெரிவுக்குத் தன் ஒப்புதல் தேவை என்று சீனா கூறுகிறது.

1959ல் சீனாவுக்கு எதிராக திபெத் தூக்கிய புரட்சிக் கொடி முறிந்ததைத் தொடர்ந்து இந்தியாவில் தலாய் லாமா நாடுகடத்தப்பட்ட நிலையில் வாழ்கிறார். இந்தியாவில் தற்போது 70,000 திபெத்தியர்கள் வாழ்கின்றனர்.

தலாய் லாமாவும் திபெத்தியர்களும் இந்தியாவில் இருப்பது சீனாவுடனான பேச்சுவார்த்தைகளின்போது இந்தியாவின் நிலையை மேலும் வலுப்படுத்தும் என்பது கவனிப்பாளர்களின் கருத்து.

தலாய் லாமாவின் பிறந்தநாளின்போது பங்கேற்ற இந்தியாவின் நாடாளுமன்ற விவகார மற்றும் சிறுபான்மையர் விவகாத்திற்கான அமைச்சர் கிரென் ரிஜிஜு, திபெத்திய மதகுருப் பதவிக்கு அடுத்து வருபவரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை அந்தப் பதவியில் தற்போது இருக்கும் மதகுருவுக்கு மட்டும் உள்ளதாக நம்புவதாய்க் கூறுகிறார்.

திரு ரிஜிஜு, பெளத்த சமயத்தைச் சேர்ந்தவர். ஜூலை 15ஆம் தேதி திரு ஜெய்சங்கர் சீனா செல்கிறார்.

குறிப்புச் சொற்கள்