சிகாகோ: பொதுச் சுகாதாரக் கட்டமைப்புக்கென தலைசிறந்த எடுத்துக்காட்டாக உலகநாடுகளால் கருதப்படும் அமெரிக்காவின் ‘சிடிசி’ எனப்படும் நோய்க் கட்டுப்பாட்டு தடுப்பு மையத்துக்குத் தலைவராக டாக்டர் டேவ் வெல்டனை அறிவித்துள்ளார் டோனல்ட் டிரம்ப்.
டாக்டர் டேவ் மருத்துவரும் அமெரிக்காவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவரைத் தமது தேர்வாக அமெரிக்க அதிபராகப் பதவியேற்கவுள்ள திரு டிரம்ப் நவம்பர் 22ஆம் தேதி அறிவித்தார்.
கிட்டத்தட்ட 17.3 பில்லியன் அமெரிக்க டாலர் (S$23.29 பி.) மதிப்புடைய சிடிசி, தொற்றுநோய்ப் பரவல் குறித்து கண்காணிப்பதுடன் அதற்கான செயல்பாடுகளைக் கையாண்டு வருகிறது. வழக்கமாகப் பிள்ளைகளுக்குத் தேவைப்படும் தடுப்பூசி மருந்து, கொவிட்-19 கொள்ளைநோய் காலத்தில் போடப்படும் தடுப்பூசி மருந்து போன்ற உரிமம் பெற்ற தடுப்பூசிகளையும் பரிந்துரை செய்யும் அதிகாரத்தை சிடிசி பெற்றுள்ளது.
அமெரிக்க மக்களவையில் டாக்டர் வெல்டன், 71, 1995ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை ஃபுளோரிடாவின் 15வது மாவட்டத்தைப் பிரதிநிதித்தார். அதையடுத்து 2008ஆம் ஆண்டு அவர் தேர்தலில் நிற்கவில்லை.
இந்நிலையில், சிடிசி மீண்டும் அதன் உண்மையான நோக்கத்தை அடைவதை டேவ் உறுதி செய்வார் என்றும் பெருவாரியாகப் பரவும் நாள்பட்ட தொற்றுநோய்க்கு ஒரு முடிவு கட்டுவார் என்றும் திரு டிரம்ப் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.