பிரேசில்: பிரேசிலில் எட்டு மாதப் பெண் குழந்தையைப் பறிகொடுத்த பெற்றோருக்குச் சிறிது நேரம் மீண்ட நம்பிக்கை மீண்டும் பறிபோனது.
கியாரா கிறிஸ்லெய்ன் டி மோரா டாஸ் சன்டோஸ் என்பது அக்குழந்தையின் பெயர்.
கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்ட கியாராவைப் பெற்றோர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
பிள்ளை சுவாசிக்கவில்லை, இதயத்துடிப்பு நின்றுவிட்டது என்று கூறிய மருத்துவர்கள் அவள் இறந்துவிட்டதாக அக்டோபர் 19ஆம் தேதி கூறினர்.
துயரத்துக்கிடையே பிள்ளையின் இறுதிச்சடங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அவளது மரணம் அதிகாரபூர்வமாக உறுதிசெய்யப்பட்டு 16 மணி நேரம் கழித்து இறுதிச்சடங்கு தொடங்கியது.
அப்போது சவப்பெட்டிக்கு அருகில் நின்றிருந்த உறவினரின் கைவிரலைப் பிள்ளை இறுகப் பற்றியதாகக் கூறப்படுகிறது.
உடனடியாகக் குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
மருத்துவர்களும் உடனடியாகச் செயலில் இறங்கினர். குழந்தையைக் காப்பாற்ற முயன்றனர். இருப்பினும் 24 மணி நேரத்தில் இரண்டாவது முறையாக மருத்துவமனை அக்குழந்தையின் மரணத்தை உறுதிசெய்தது.
தொடர்புடைய செய்திகள்
இதுகுறித்துக் காவல்துறை விசாரணை நடைபெறும் வேளையில் மருத்துவமனை குழந்தையின் பெற்றோரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளது.

