புக்கெட்டில் உடற்பிடிப்பு செய்துகொண்ட சிங்கப்பூர் ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.
டிசம்பர் 7ஆம் தேதி உடற்பிடிப்பு செய்துகொண்ட அந்த 52 வயது ஆடவர் திரு லீ முன் டக் என அடையாளம் காணப்பட்டுள்ளது என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பாத்தோங் கடற்கரையில் உள்ள ஒரு கடையில் அவர், 45 நிமிட நேர உடற்பிடிப்பு செய்துகொண்டார்.
சம்பவ இடத்திற்கு இரவு 11.30 மணியளவில் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டதாக பாத்தோங் காவல்துறை தலைவர் போல் கால் சாலெர்ம்சாய் ஹெர்ன்சாவட் தெரிவித்ததாக பேங்காக் போஸ்ட் தகவல் வெளியிட்டிருந்தது.
உடற்பிடிப்பு செய்யும்போது ஆடவர் தூங்கிவிட்டதாகவும் குறட்டைச் சத்தம் கேட்டதாகவும் திரு ஹெர்ன்சாவட் கூறினார்.
“சிறிது நேரத்தில் அவரிடம் வழக்கத்திற்கு மாறான அறிகுறி தென்பட்டது. உடற்பிடிப்பு நிலைய ஊழியர்கள் அவரை உயிர்ப்பிக்க முயற்சி செய்தும் அவருக்கு சுயநினைவு திரும்பவில்லை,” என்றும் அவர் தெரிவித்தார்.
உடற்பிடிப்பு நிலையத்தில் அவருடன் இருந்த அவரது மனைவி உடற்கூறாய்விற்கு அனுமதிக்கவில்லை.
சமயச் சடங்குகளுக்காக உடலை அவர் எடுத்துச் சென்றுவிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
உடற்பிடிப்புக்கு முன்பு தனது கணவர் பியர் குடித்திருந்ததாக காவல்துறையிடம் அவர் கூறினார்.
அதிக உடல் அசைவில்லாத வாழ்க்கையை கணவர் கடைப்பிடித்ததால் அவரது மரணத்தில் சூது இருப்பதாக தாம் சந்தேகிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இவ்வாரம் தாய்லாந்து உடற்பிடிப்பு நிலையத்தில் இரண்டாவது முறையாக ஒருவர் மரணமடைந்துள்ளார். இதற்கு முன்பு வடகிழக்கு தாய்லாந்தில் கழுத்துக்கு மசாஜ் செய்துகொண்ட தாய்லாந்து பெண் பாடகர் மரணமடைந்தார்.