நேப்பாளத்தில் மரண எண்ணிக்கை அதிகரிப்பு, அனைத்துலக உதவி மறுப்பு

நேப்பாளத்தில் மரண எண்ணிக்கை அதிகரிப்பு, அனைத்துலக உதவி மறுப்பு

புதிதாக வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அஞ்சப்படுகிறது
1 of 2
படம்: ஏஎஃப்பி
படம்: ஏஎஃப்பி

28 Aug 2026 - 9:53 am

2 mins read

காத்மாண்டு: நேப்பாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம், நிலச்சரிவுகளில் மாண்டோரின் எண்ணிக்கை ஆகக் கடைசி நிலவரப்படி 500ஐ தொட்டும் நிலையில் உள்ளது.

நேப்பாளத்திலும் அருகிலுள்ள திபெத்திலும் கிட்டத்தட்ட 1,000 பேரைக் காணவில்லை. வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 28) காலை நிலவரப்படி 470க்கும் மேற்பட்டோர் மாண்டது உறுதிப்படுத்தப்பட்டது.

மேலும், இரண்டு ஏரிகளில் நீர் தேங்குவதால் புதிதாக வெள்ளம் ஏற்படக்கூடும் என்று நேப்பாளமும் சீனாவும் எச்சரித்துள்ளன.

புதன்கிழமை (ஆகஸ்ட் 26) காலை பனிப்பாறை ஒன்று சரிந்ததால் பாறைகள், மண், இடிபாடுகளுடன் பெருக்கெடுத்த வெள்ளம் கிராமங்கள் உள்ளிட்ட பகுதிகளைப் புரட்டிப்போட்டதாக இரு நாடுகளும் தெரிவித்தன. பாதிக்கப்பட்ட பாதை, மலையேறிகளும் யாத்திரிகர்களும் அதிகம் பயணம் செய்யும் ஒன்றாகும். அது, நேப்பாளத் தலைநகர் காத்மாண்டுடன் திபெத் தலைநகர் லாசாவை இணைக்கும் பாதை.

காணாமற்போனவர்களில் குறைந்தது 540 பேர் வெளிநாட்டவர். அவர்களில் குறைந்தது ஒன்பது பேர் சிங்கப்பூரர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

நேப்பாளம், சீனா, இந்தியா, அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, உக்ரேன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 35 நாடுகளைச் சேர்ந்தோரைக் காணவில்லை என்று என்டிடிவி தெரிவித்துள்ளது.

திபெத்தில் சுற்றுப்பயணிகள் மீட்பு

பேரிடரால் திபெத்தில் சிக்கிய சுற்றுப்பயணிகள் 555 பேரைச் சீன அதிகாரிகள் மீட்டதாக அந்நாட்டின் சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்தது. மீட்கப்பட்டவர்கள் எந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பதை சின்ஹுவா குறிப்பிடவில்லை.

இந்த எண்ணிக்கை, நேப்பாளத் தரப்பு வெளியிட்ட எண்ணிக்கையுடன் தொடர்புகொண்டதா என்பது தெரியவில்லை என்று பிபிசி ஊடகம் கூறியது.

அனைத்துலக உதவிக்கு மறுப்பு

இந்நிலையில், தேடல், மீட்புப் பணிகளில் கைகொடுக்கப் பல நாடுகள் உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளன. ஆனால், நேப்பாளம் அதை மறுத்துள்ளது.

தேடல், மீட்புப் பணிகளைக் கையாளும் ஆற்றல் தங்களின் பாதுகாப்பு அமைப்புகளுக்கு உள்ளதாக நேப்பாளம் கூறியுள்ளது.

அதற்குப் பதிலாக ஒரே தளம் வழியாக ரொக்கமாக நன்கொடை பெற நேப்பாளம் விரும்புவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுசீரமைப்புப் பணிகளின்போது கூடுதல் நிதியுதவி, மற்றவகை ஆதரவு கோரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிதி ஆதரவு வழங்க ஏற்கெனவே சில நாடுகள் முன்வந்துள்ளன. அவற்றைவிட அதிகமான நாடுகள் தேடல், மீட்பு, மறுவாழ்வு, மறுசீரமைப்புப் பணிகளில் நேப்பாளத்துக்குக் கைகொடுக்க முன்வந்துள்ளன.

இந்தியா, சீனா, அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள் தேடல், மீட்புப் பணிகளில் கைகொடுக்க முன்வந்தனர்.

நிறுத்திய மீட்புப் பணிகளை மீண்டும் தொடங்கியது சீனா

திபெத்தில் சீனா மீட்புப் பணிகளை மீண்டும் தொடங்கிவிட்டதாக அந்நாட்டின் சின்ஹூவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னதாக சீனா மீட்புப் பணிகளை நிறுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட ஏரி ஒன்றில் நீர்மட்டம் அபாயகரமான அளவுக்கு அதிகரித்ததால் மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டன. நீர்மட்டம் சற்று குறைந்ததையடுத்து பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்
உலகம்நேப்பாளம்வெள்ளம்பேரிடர்உயிரிழப்புமரணம்மீட்புசீனாநிலச்சரிவுமலை

தொடர்புடைய செய்திகள்