பேங்காக்: வரும் அக்டோபர் மாதம் மிகப் பெரிய அளவில் ‘தீபாவளி 2025’ திருவிழாவை நடத்த தாய்லாந்து அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இதன் தொடர்பில் தாய்லாந்து தேசிய மென்திறன் மேம்பாட்டுக் குழுவின் தலைவர் டாக்டர் சுரபோங் சுப்வோங்லீயும் தாய்லாந்து வணிகப் பேராளரும் இந்தியச் சுற்றுப்பயணிகள் சந்தை மேம்பாட்டுத் துணைக்குழுவின் தலைவருமான நளினி தவீசினும் புதன்கிழமை (மே 21) கலந்துரையாடினர்.
அக்கூட்டத்தில் தாய்லாந்திற்கான இந்தியத் தூதர் நாகேஷ் சிங்கும் பத்துக்கும் மேற்பட்ட இந்தியாவின் முன்னணி தனியார் நிறுவனங்களின் பேராளர்களும் அக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இவ்வட்டாரத்தின் திருவிழாத் தலமாகத் தாய்லாந்தின் நற்பெயரை மேம்படுத்தி, 500,000க்கும் மேற்பட்ட இந்தியப் பயணிகளை ‘தீபாவளி 2025’ திருவிழாவிற்கு ஈர்க்க இலக்கு வகுக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்துப் புத்தாண்டை ஒட்டிக் கொண்டாடப்படும் சொங்ரான் திருவிழாவை முன்மாதிரியாகக் கொண்டு, தீபாவளித் திருவிழாவையும் பிரம்மாண்டமாக நடத்தவும் துடிப்புமிக்க நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்யவும் தாய்லாந்து திட்டமிடுகிறது.
இவ்வாண்டுத் தீபாவளித் திருவிழாவானது பண்பாடு, சமூகம், பொருளியல் சார்ந்த தாய்லாந்து - இந்திய உறவுகளை மேலும் வலுப்படுத்த முக்கியத் தளமாகத் திகழும் என்று திருவாட்டி நளினி தெரிவித்தார்.
இந்தியர்களுக்கு விருப்பமான சுற்றுலாத் தலமாகத் தாய்லாந்து திகழ்ந்து வருகிறது என்று திரு நாகேஷ் கூறினார். கடந்த 2024ஆம் ஆண்டில் 2.1 மில்லியனுக்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாய்லாந்திற்கு வருகைபுரிந்ததாக அவர் குறிப்பிட்டார்.
இந்தியா - தாய்லாந்து இடையே 13 விமான நிறுவனங்களின் நேரடிச் சேவைகள் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

