சோல்: தென்கொரிய செயலிகள் தளத்திலிருந்து டீப்சீக் செயலி நீக்கப்படுவதாக அந்நாட்டு அதிகாரிகள் திங்கட்கிழமை (பிப்ரவரி 17) தெரிவித்தனர்.
சீனாவைச் சேர்ந்த செயற்கை நுண்ணறிவு நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த செயலி மறுஆய்வு செய்யப்படுவதாக அவர்கள் கூறினர்.
அதுவரை டீப்சீக் செயலியைத் தென்கொரியாவில் பதிவிறக்கம் செய்ய முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.
டீப்சீக் நிறுவனம், செயலி மூலம் பெறும் தனிப்பட்ட விவரங்களை எவ்வாறு கையாள்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் அதுகுறித்து தென்கொரிய அதிகாரிகள் விசாரணை நடத்துவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அது விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்று தென்கொரியாவின் தனிநபர் தகவல் பாதுகாப்பு ஆணையத்தின் துணைத் தலைவர் திரு சோய் ஜாங் ஹியூக் கூறினார்.
டீப்சீக், அதன் ஆர்ஐ சேட்பாக்ஸ் அம்சத்தை கடந்த ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தியது.
அதே சேவையை வழங்கும் அமெரிக்கச் செயலிகள் வசூலிக்கும் கட்டணத்தைவிட டீப்சீக் வசூலிக்கும் கட்டணம் மிகவும் குறைவு. ஆனால், தென்கொரியாவுடன் பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகள் ‘டீப்சீக்’ நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளன.
தென்கொரிய செயலிகள் தளத்திலிருந்து டீப்சீக் செயலி அந்நாட்டு நேரப்படி பிப்ரவரி 15ஆம் தேதி மாலை 6 மணிக்கு அகற்றப்பட்டது.