ஹாங்காங்: முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஜனநாயக ஆதரவாளருமாகிய அவ் கம் சான், மக்காவ் நகர நீதிமன்றத்தில் பல குற்றச்சாட்டுகளின்பேரில் கடந்த வாரம் (நவம்பர் 6) பன்னிரண்டரை ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.
சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள மக்காவ் அரசாங்கத்தை கீழறுக்கும் செயல் உட்பட பல குற்றச்சாட்டுகள் அவர்மீது சுமத்தப்பட்டது.
முன்னாள் போர்ச்சுகீசிய ஆட்சிக்கு உட்பட்டிருந்த அந்நகரம் 1999ஆம் ஆண்டில் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதே ஆண்டில் உருவாக்கப்பட்டு 2023ல் கடுமையாக்கப்பட்ட மக்காவ் தேசிய பாதுகாப்பு சட்டப்படி சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட முதல் வழக்காக இது அமைகிறது. அவ்வழக்கு மூன்றே நாள்களில் ரகசியமாக விசாரிக்கப்பட்டு, தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
ஜூலை 2025ல் திரு அவ் கைதுசெய்யப்பட்டார். அவர் ஆண்டுதோறும் பெய்ஜிங்கின் தியனென்மென் சதுக்கத்தில் சீன அரசாங்கம் நடத்திய ஒடுக்குமுறையில் உயிரிழந்தோருக்கென நினைவஞ்சலிக் கூட்டங்களை இணைந்து ஏற்பாடு செய்துவந்தார்.
1989 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பெய்ஜிங்கில் நடந்த அந்த வன்முறையில் மரணமடைந்தோருக்கு பொதுமக்கள் கலந்துகொண்ட இரங்கல் கூட்டங்கள் மக்காவிலும் ஹாங்காங்கிலும் மட்டுமே அனுமதிக்கப்பட்டன.
ஹாங்காங், மக்காவ் ஆகிய பகுதிகளுக்கான அமெரிக்கத் தூதரகம் அவ் சிறை சென்றது குறித்து திங்கட்கிழமை (நவம்பர் 9) அதன் கண்டனங்களைத் தெரிவித்தது. அமைதியாக நடந்த அரசியல் எதிர்ப்புகளையும் அடிப்படை உரிமைகளையும் தேசிய பாதுகாப்பின் கட்டுப்பாடற்ற அதிகாரத்தைக் கொண்டு ஒடுக்கும் சீன ஆட்சியின் மற்றுமொரு எடுத்துக்காட்டு இது என்று அது சாடியது.
திரு அவ் உட்பட, அண்மையில் சிறைத் தண்டனை நீட்டிக்கப்பட்ட ஹாங்காங்கின் ஜனநாயக ஆர்வலரான ஜோஷுவா வோங் போன்றோர் மீதான நடவடிக்கைகள், மனித உரிமையையும் சுதந்திரத்தையும் அதன் நகரங்களில் திட்டமிட்டு அழிக்கும் சீனாவின் செயல்பாடுகள் என்று அமெரிக்கத் தூதரகப் பேச்சாளர் கூறினார்.
ஐரோப்பிய ஒன்றியமும் அவ்வமைப்பின் குடிமகன் என்று அவ்வைக் குறிப்பிட்டு அவரது வழக்கு விசாரணையைக் குறைகூறியது. ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடான போர்ச்சுகல், சீனாவிடம் அதன் தீவிர எதிர்ப்பைப் பதிவுசெய்தது.
மக்காவில் இயங்கும் சீனாவின் உயர்மட்ட அதிகாரி, அந்நகரில் எடுக்கப்படும் சட்ட முடிவுகள் இறுதியானவை எனவும் வெளிநாடுகள் அதில் தலையிடுவது தோல்வியில்தான் முடியும் என்றும் கருத்துரைத்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்டனங்களை மறுத்த மக்காவ் ஆட்சியினர், வழக்கறிஞர் இன்றி நடந்த அவ்வின் வழக்கைச் சாடிய ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அலுவலகத்திடமும் அவ்ரகளது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
