வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் முன்வைத்துள்ள 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பாதுகாப்பு வரவு செலவுத் திட்டத்தைத் தடுத்து நிறுத்த ஜனநாயகக் கட்சியினர் தயாராகி வருகின்றனர்.
மத்திய கிழக்கில் நடந்து வரும் விரும்பத்தகாத போருக்கு மத்தியில் டிரம்ப் முன்னெப்போதும் இல்லாத $1.5 டிரில்லியன் (S$1.92 டிரில்லியன்) பாதுகாப்புத் திட்டத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு நாடாளுமன்ற ஒப்புதல் கிடைத்துவிடும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அண்மையில் நடந்த இடைத்தவணைத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியினரின் கை ஓங்கியதால் அந்த எதிர்பார்ப்பு தவிடுபொடியாகியுள்ளது.
நவம்பர் 3ஆம் தேதி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றிய ஜனநாயகக் கட்சியினர், முந்தைய நிதியாண்டைவிட 44 விழுக்காடு அதிகரிக்கப்பட்டுள்ள இந்தப் பாதுகாப்பு வரவு செலவுத் திட்டத்துக்கு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். தற்போது, அதை முன்னெடுப்பதற்கான எந்தவொரு முயற்சியையும் தடுக்கப்போவதாக அவர்கள் சூளுரைத்துள்ளனர்.
இதற்கிடையே ஜனவரி 2027இல் புதிய நாடாளுமன்றம் கூடும் வரை உள்ள இடைக்கால கூட்டத்தொடரில் இந்த பேரளவு பாதுகாப்புச் செலவின மசோதாவை நிறைவேற்றுவதற்கான ஆதரவை குடியரசுக் கட்சியினரால் பெற முடியாமல் போகலாம்.
மேலும் ஜனநாயகக் கட்சியினரின் இந்த எதிர்ப்பால் டிரம்ப்பின் மிக முக்கிய பாதுகாப்புத் திட்டங்களான ‘கோல்டன் டோம்’ ஏவுகணை தடுப்பு அரண், அவரது ‘டிரம்ப்-கிளாஸ்’ போர்க் கப்பல் திட்டம் உள்ளிட்டவற்றை முடக்குவதற்கான அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
அது மட்டுமல்லாமல் பாதுகாப்புத் துறை ஒப்பந்த நிறுவனங்களுக்கும் பின்னடைவை ஏற்படுத்துகிறது. இவற்றில் சில நிறுவனங்கள் டிரம்ப் நிர்வாகத்துடனான முரண்பட்ட நலன்கள் குறித்த நாடாளுமன்ற விசாரணையை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளன.
இடைத்தேர்தல் முடிவுகள், அமெரிக்க ராணுவச் செலவினங்கள் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பைத் தகர்த்ததால் லாக்ஹீட் மார்ட்டின், நார்த்ராப் கிரம்மன் உள்ளிட்ட முன்னணி ஒப்பந்த நிறுவனங்களின் பங்குகள் இந்த வாரம் சரிந்தன.
