தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சீனா, தென்கொரியா, ஜப்பானுடன் ஆசியான் உறவுகளில் மேம்பாடு

2 mins read
a9eee02a-6bfc-47f2-88cf-9859a4253fb2
ஆசியான் ‘பிளஸ் 3’ உச்சநிலை மாநாட்டில் கலந்துகொண்ட தலைவர்கள். - படம்: சாவ் பாவ்

மின்னிலக்கம், பசுமைப் பொருளியல் துறைகளில் தடையற்ற வர்த்தகத் தளத்தை மேம்படுத்த ஆசியான் உறுப்பு நாடுகளும் சீனாவும் பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்துள்ளன.

தென்கொரியாவுடனான ஆசியானின் உறவு முழுமையான உத்திபூர்வப் பங்காளித்துவமாக மேம்பாடு கண்டதுடன் ஆசியான்-கொரியா தடையற்ற வர்த்தக உடன்பாடும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

ஜப்பானுக்கும் ஆசியானுக்கும் நீடித்த, அதிகளவிலான ஒத்துழைப்பு இருப்பதுடன் வட்டாரப் பாதுகாப்புக்கு ஜப்பான் துடிப்புமிக்க பங்கை ஆற்றி வருகிறது. கிழக்கு ஆசிய நாடுகளான [Ϟ]சீனா, தென்கொரியா, ஜப்பானுடன் தனித்தனியே ஆசியான் தலைவர்கள் உச்சநிலை மாநாட்டில் கலந்துகொண்டதுடன் மூன்று தரப்பையும் சேர்ந்த ஆசியான் ‘பிளஸ் 3’ உச்சநிலை மாநாட்டிலும் அக்டோபர் 10ஆம் தேதி அவர்கள் கலந்துகொண்டனர்.

ACFTA எனும் ஆசியான் - சீனா தடையற்ற வர்த்தகத் தளத்தின் 3.0 மேம்பாடு குறித்த பேச்சுவார்த்தை 2022ஆம் ஆண்டு வர்த்தக, தொழில் அமைச்சால் தொடங்கப்பட்டது. உடன்பாடுகள் காலத்துக்கு ஏற்றவாறும் எதிர்காலத்துக்குத் தயார்நிலையிலும் உலகளாவிய சவால்களுக்கு உகந்ததாகவும் இருப்பதை உறுதிசெய்யும் நோக்கில் பேச்சுவார்த்தைத் தொடங்கப்பட்டதாக அமைச்சு தெரிவித்தது.

2010ஆம் ஆண்டு செயல்பாட்டுக்கு வந்த பிறகு இந்த உடன்பாடு இரண்டாவது முறையாக மேம்பாடு கண்டுள்ளது.

சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் இந்த மேம்பாட்டை வரவேற்று பேசினார். சீனப் பிரதமர் லீ சியாங், தென்கொரியாவின் அதிபர் யூன் சுக்-யோல், ஜப்பானின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள ஷிகெரு இஷிபா ஆகியோர் மாநாடுகளில் கலந்துகொண்டனர்.

பொருளியல் ஒருங்கிணைப்பை வலுவாக்குவது குறித்து அணுக்கமாகப் பணியாற்றி முழுமையான வட்டாரப் பொருளியல் பங்காளித்துவ உடன்பாடு எட்டப்பட்டதை சுட்டிக்காட்டிப் பேசிய பிரதமர் வோங், மூன்று நாடுகளுடனான ஒத்துழைப்பைக் கூடுதல் துறைகளில் விரிவாக்கவேண்டும் என்றார்.

விநியோகச் சங்கிலி தொடர்புத்திறனை வலுப்படுத்துவது, எதிர்கால அதிர்வுகளிலிருந்து பாதுகாக்க ஒன்றுபட்ட மீட்சித்திறனை வலுப்படுத்துவது, மின்னிலக்க, பசுமைத் துறைகளில் ஒத்துழைப்பை ஆழமாக்குவது ஆகிய துறைகளை அவர் குறிப்பிட்டுப் பேசினார்.

இதற்கிடையே, தென்சீனக் கடல் விவகாரம் குறித்தும் உச்சநிலைக் கூட்டங்களில் பேசப்பட்டது. ஆசியானும் சீனாவும் தொடர்ந்து ஒருவரையொருவர் சந்தித்து, உரையாடி அமைதியான முறையில் சச்சரவுகளுக்குத் தீர்வு காணவேண்டும் என்று பிரதமர் வோங், சீனாவுடனான ஆசியான் உச்சநிலைக் கூட்டத்தில் கூறினார்.

அனைத்துலகச் சட்டத்துக்கு அனைத்துத் தரப்பினரும் உடன்பட வேண்டும் என்பதே சிங்கப்பூரின் தொடர்ச்சியான நிலைப்பாடு என்பதைப் பிரதமர் சுட்டினார்.

தென்கிழக்காசிய வட்டாரத்தில் நிலைப்பாட்டை உறுதிசெய்யும் சக்தியாக ஆசியான் இருந்து வருவதாக அதன் தலைமைச் செயலாளர் கவ் கிம் ஹோர்ன் கூறினார். “ஆசியான் மீதான நம்பிக்கையும் உறுதியும்தான் $230 பில்லியன் முதலீடுகள் இடம்பெற்றதற்குக் காரணம்,” என்று அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்