இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களின் மேம்பாட்டுக்குப் புதிய நடவடிக்கைகள்

சமய நல்லிணக்கத்தைக் காக்க அரசாங்கத்தின் முயற்சிகள்

இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களின் மேம்பாட்டுக்குப் புதிய நடவடிக்கைகள்

2 mins read
43855cb4-206d-4281-9112-4b46e4c81528
தேசிய ஒருமைப்பாட்டுத் துணை அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜும் பிரதமர் துறை (மத விவகாரங்கள்) துணை அமைச்சர் மர்ஹமா ரோஸ்லியும் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினர். - படம்: பெர்னாமா

புத்ராஜெயா: மலேசியாவில் இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகத்தை மேம்படுத்தவும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும் மலேசியா புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

சமூக நல்லிணக்கம் தொடர்ந்து பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்வதற்காக கலந்துரையாடல், வழிகாட்டுதல்களைப் பின்பற்றுதல் உட்பட ஒருங்கிணைந்த நிர்வாகம் மூலம் இது முன்னெடுக்கப்படுகிறது.

இது தொடர்பாக வெள்ளிக்கிழமை (மார்ச் 6) நடைபெற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டத்திற்கு மலேசியாவின் தேசிய ஒருமைப்பாட்டுத் துணை அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ், பிரதமர் துறை (சமய விவகாரங்கள்) துணை அமைச்சர் மர்ஹமா ரோஸ்லி ஆகியோர் தலைமை தாங்கினர்.

வழிபாட்டுத் தலங்களின் மேலாண்மை, கட்டுமான வழிகாட்டுதல்கள் குறித்த புரிதலை மேம்படுத்துவதன் அவசியத்தை இந்தக் கூட்டம் வலியுறுத்தியது.

இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கான நிதியை (Ribi) கண்காணிப்பதில் வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சு (KPKT) முக்கிய பங்காற்றுகிறது. அனைத்துத் தரப்பினரும் இந்த அமைச்சின் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டதாக இரு துணை அமைச்சர்களின் கூட்டு அறிக்கை குறிப்பிட்டது.

ட்டவிரோதக் கட்டுமானங்களைத் தவிர்க்க, பல்வேறு நடைமுறைச் சட்டங்கள் பயன்படுத்தப்படும். சமயம், இனம், அரச நிறுவனங்கள் (3R) தொடர்பான விவகாரங்கள் சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் தூண்டப்படக்கூடாது என அரசாங்கம் எச்சரித்துள்ளது. பேச்சுவார்த்தை, சமரசம் மூலம் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதே முதன்மையான அணுகுமுறையாக இருக்கும்.

இந்தக் கூட்டத்தில் இந்து, கிறிஸ்துவ, பௌத்த, சீக்கிய சமயப் பேராளர்கள் கலந்துகொண்டனர். உள்துறை அமைச்சு, வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சு, காவல்துறை, இஸ்லாமிய மேம்பாட்டுத் துறை, மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையம், சங்கங்களின் பதிவு இலாகா அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

குறிப்புச் சொற்கள்