மணிலா: சீனாவைச் சேர்ந்த சட்டவிரோத கும்பல்களுடன் தொடர்பு இருப்பதாக பிலிப்பீன்ஸின் பம்பான் நகரத்தின் முன்னாள் மேயர் அலிஸ் குவோவிடம் விசாரணை நடத்தப்பட்டது.
பிலிப்பீன்சிலிருந்து தப்பி ஓடிய குவோ அண்மையில் இந்தோனீசியாவில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், குவோவை பிலிப்பீன்ஸ் அதிகாரிகளிடம் இந்தோனீசிய அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
அவரை பிலிப்பீன்சுக்குத் திருப்பிக் கொண்டு வந்த அதிகாரிகளின் செயல் பிலிப்பீன்ஸ் நாட்டினரைக் கோபப்படுத்தியுள்ளது.
குவோவுடன் சேர்ந்து அவர்கள் படம் எடுத்துக்கொண்டனர்.
படத்தில் குவோ உட்பட அனைத்து அதிகாரிகளும் சிரித்துக்கொண்டிருப்பதைப் பார்த்து பிலிப்பீன்ஸ் நாட்டினர் எரிச்சலடைந்தனர்.
அவரைக் கைது செய்துவிட்டதைக் காட்ட ஆதாரமாக அப்படம் எடுக்கப்பட்டதாகவும் ஆனால் குவோ சிரித்துக்கொண்டிருந்தது தமக்குத் தெரியாது என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளில் ஒருவர் தெரிவித்தார்.
குவோ மீது இரண்டு கைது ஆணைகள் பிறப்பிக்கப்பட்டும் அவருக்குக் கைவிலங்கு போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
குடிநுழைவுச் சட்டங்களை மீறியதற்காக அவரை இந்தோனீசியாவிலிருந்து வெளியேற்றியதாக இந்தோனீசியக் குடிநுழைவு அலுவலகம் செப்டம்பர் 5ஆம் தேதியன்று தெரிவித்தது.
செப்டம்பர் 6ஆம் தேதியன்று குவோ பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவை அடைந்தார்.
அவர் தனியார் விமானத்தில் பிலிப்பீன்சுக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அவருடன் பிலிப்பீன்ஸ் உள்துறை அமைச்சர் திரு பெஞ்சமின் அபாலோஸ் ஜூனியர் உட்பட பிலிப்பீன்ஸ் அதிகாரிகள் பலர் இருந்தனர்.
“எனக்கு எதிராகக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பிலிப்பீன்ஸ் அதிகாரிகளின் உதவியை நாடியுள்ளேன்,” என்று பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் குவோ கூறினார்.
குவோவுக்குப் பாதுகாப்பு வழங்குவதில் கடப்பாடு கொண்டுள்ளதாக அமைச்சர் அபாலோஸ் உறுதி அளித்தார்.
ஆனால் அனைத்து உண்மைகளையும் குவோ தெரிவித்துவிட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

