உய்கர் இனத்தவர்களைச் சீனாவுக்கு அனுப்ப வேண்டாம்; தாய்லாந்திடம் கேட்டுக்கொண்ட ஐநா

1 mins read
89349314-8d78-4949-828f-09903d557e89
தீவிரக் கண்காணிப்பு, முகாம்களில் அடைத்து வைத்து மிகக் கடுமையான வேலைகளைச் செய்ய பலவந்தப்படுத்துவது போன்ற துன்புறுத்தல்களுக்கு சீனாவில் உய்கர் இனத்தவர்கள் ஆளாவதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. - படம்: ராய்ட்டர்ஸ்

பேங்காக்: தாய்லாந்தில் உள்ள 48 உய்கர் இனத்தவர்களைச் சீனாவுக்கு நாடு கடத்த வேண்டாம் என்று தாய்லாந்திடம் ஐக்கிய நாட்டு நிறுவனம் கேட்டுக்கொண்டது.

அவ்வாறு செய்தால் அவர்கள் சீனாவில் மிகக் கடுமையான சித்ரவதைக்கு ஆளாகும் அபாயம் இருப்பதாக அது எச்சரிக்கை விடுத்தது.

தாய்லாந்தில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அந்த உய்கர் இனத்தவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை சீனாவுக்குத் தாய்லாந்து அனுப்ப திட்டமிட்டுள்ளதாக மனித உரிமை அமைப்பினர்களும் தாய்லாந்தின் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூறினர்.

ஆனால் அத்தகைய எண்ணம் தனக்கு இல்லை என்று தாய்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சீனாவின் மேற்குப் பகுதியில் உள்ள சிங்ஜியாங் மாவட்டத்தில் ஏறத்தாழ 10 மில்லியன் உய்கர் இனத்தவர்கள் உள்ளனர்.

அவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள்.

தீவிரக் கண்காணிப்பு, முகாம்களில் அடைத்து வைத்து மிகக் கடுமையான வேலைகளைச் செய்ய பலவந்தப்படுத்துவது போன்ற துன்புறுத்தல்களுக்கு சீனாவில் உய்கர் இனத்தவர்கள் ஆளாவதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.

இதைச் சீனா திட்டவட்டமாக மறுத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்