ரியாத்: சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உத்தேச வான்வழி அச்சுறுத்தல் குறித்துப் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 25) மூன்று வெடிச்சத்தங்கள் கேட்டன.
ஏமனின் ஹூதி குழுவால் நகரை நோக்கி ஏவப்பட்ட புவியீர்ப்பு ஏவுகணையைத் தடுத்து அழித்ததாகச் சவூதி தலைமையிலான கூட்டுப் படைகள் பின்னர் அறிவித்தன.
ரியாத்தில் உள்ள ஏஎஃப்பி செய்தியாளர் ஒருவர் வெடிச்சத்தங்களைக் கேட்டதாகச் சொன்னார். அதற்கு முன்னர், வான்வழி அச்சுறுத்தல் குறித்தும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியும் குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கைகள் அனுப்பப்பட்டிருந்தன.
ஏமனில் ஹூதி குழுவினருக்கு எதிராகப் போரிட்டுவரும் சவூதி தலைமையிலான கூட்டணிப் படை, தனது வான்தற்காப்புக் கட்டமைப்புகள், இலக்கை அடைவதற்கு முன்பே ஏவுகணையை அழித்துவிட்டதாகக் கூறியது. இந்த அறிவிப்பு ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், ரியாத் விமான நிலையம் தொடர்ந்து ராணுவ இலக்காகவே உள்ளது என்றும் அதற்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும் என்றும் ஹூதி ராணுவப் பேச்சாளர் யாஹ்யா சாரி தெரிவித்தார்.
மேலும் அதைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அனைத்து விமான நிறுவனங்களையும் விமான நிலைய ஊழியர்கள், பயணிகள் அனைவரையும் அவர் எச்சரித்தார்.
ஞாயிற்றுக்கிழமையிலிருந்து முதலாம் முனையம் உள்நாட்டு விமானங்களுக்கும் இரண்டாம் முனையம் தேசிய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் அனைத்துலக விமானங்களுக்கும் ஒதுக்கப்படும் என்று மன்னர் காலித் விமான நிலையம் சனிக்கிழமை இரவு பின்னேரத்தில் தெரிவித்திருந்தது.
அக்டோபர் 10ஆம் தேதி விமான நிலையத்தின்மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து அதன் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன. அதற்கு ஹூதி குழுவினர் பொறுப்பேற்றனர். அத்தாக்குதலில் 13 பேர் மாண்டனர்; மேலும் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இது அந்நாட்டில் கிட்டத்தட்ட பத்தாண்டுகளில் நிகழ்ந்த மிக மோசமான தாக்குதல். செயல்பாடுகள் நிறுத்திவைக்கப்பட்ட நடவடிக்கை இரு நாள்களுக்குப் பிறகு மேலும் நீட்டிக்கப்பட்டது.
சவூதி விமான நிலையங்கள், துறைமுகங்கள், எண்ணெய் உள்கட்டமைப்புகள்மீது ஹூதி குழுவினர், புவியீர்ப்பு ஏவுகணைகளையும் ஆளில்லா வானூர்திகளையும் வீசித் தாக்கி வருகின்றனர்.
இதன்மூலம் அமெரிக்காவின் கூட்டாளியான சவூதி அரேபியாவை விரிவான போருக்குள் இழுத்து நெருக்குதல் கொடுக்க அவர்கள் முனைகின்றனர்.
சவூதி அரேபியா, ஏமனில் தனது ராணுவ ஈடுபாட்டை அண்மைக் காலத்தில் தீவிரப்படுத்தியுள்ளது. ஹூதி குழுவினர்மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியும் அரசாங்கத்தின் எதிர்த்தாக்குதலுக்குக் கைகொடுத்தும் தனது ஆதரவைக் காட்டி வருகிறது சவூதி அரேபியா.
செப்டம்பரில் செங்கடலின் கரையோரத்தில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை ஹூதி குழுகைப்பற்றியதைத் தொடர்ந்து, சவூதி அரேபியா அதற்கு எதிரான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.
