வெள்ள நிவாரணத்தில் ஆளில்லா வானூர்தி; தாய்லாந்து திட்டம்

வெள்ள நிவாரணத்தில் ஆளில்லா வானூர்தி; தாய்லாந்து திட்டம்

படம்: ஏஎ:ப்பி

27 Nov 2025 - 7:31 pm

2 mins read

ஹட் யாய் / கோலா பெர்லிஸ்: வெள்ள நிவாரணப் பணிகளில் ஆளில்லா வானூர்திகளை (டிரோன்) பயன்படுத்த தாய்லாந்து அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

தாய்லாந்திலும் மலேசியாவிலும் வெள்ளம் வடிந்துவருகிறது. மீட்புப் பணியாளர்கள் வியாழக்கிழமை (நவம்பர் 27) உணவுப் பொட்டலங்களை தாய்லாந்தின் தென்பகுதிகளுக்கு ஆகாயம்வழி கொண்டுசெல்ல ஆளில்லா வானூர்திகளை தயார்படுத்திவருகின்றனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மக்களை மீட்கும் பணிகளையும் அவர்கள் முடுக்கிவிட்டுள்ளனர்.

ஒரு வாரத்துக்கும் மேலாக பெய்த மழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் தாய்லாந்தில் 33பேர் மரணமடைந்துள்ளனர். மலேசியாவில் இருவர் பலியாகியுள்ளனர். இரு நாடுகளிலும் ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண மையங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். உதவியை நாடியுள்ள அவர்கள் சில நாட்களாக 2 மீட்டர் அளவு வெள்ளநீரில் சூழப்பட்டுத் தவிக்கின்றனர்.

“நேரத்துக்கு எதிரான போராட்டம் இதுவாகும்,” என்று தாய்லாந்தின் அரசாங்கப் பேச்சாளர் சிரிபொங் அங்காசகுல்கியட் ‘நேஷன்’ தொலைக்காட்சி ஊடகத்திடம் கூறினார். அங்கு தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் மீட்புக் குழுக்கள் உணவுப் பொட்டலங்களை விநியோகிக்க செயற்கைக் கோள்களை பயன்படுத்த வேண்டியுள்ளது என்றார் அவர்.

தாய்லாந்தின் தென்மாவட்டங்களில் மூன்று மில்லியன் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ள ஹட் யாய் நகரில், தீவிர சிகிச்சையிலுள்ள நோயாளிகள் உள்பட 3,000க்கும் மேற்பட்டோர் ஆகாயவழி மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மீட்புப் பணிகளில் உணவு, மருந்து உதவிப்பொருள்களுடன் ராணுவ ஹெலிகாப்டர்கள், விமானங்கள், விமானந்தாங்கி கப்பல், கனரக வாகனங்கள், சிறு படகுகள் என பல ஈடுபட்டுள்ளன. கடந்த 300 ஆண்டுகளில் வரலாறு காணாத வகையில் கடந்த நவம்பர் 21ஆம் தேதி ஒரேநாளில் 335மில்லிமீட்டர் அளவுக்கு தாய்லாந்தில் மழை பதிவுசெய்யப்பட்டுள்ளது.

மலேசியாவில் பெர்லிஸ் உட்பட ஏழு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் மொத்தம் 34,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது இந்தோனீசியாவின் வடக்கு சுமத்திரா மாநிலத்தைத் தாக்கிய சூறாவளியால் ஏற்பட்ட நிலச்சரிவிலும் வெள்ளத்திலும் 28 பேர் மாண்டுவிட்டனர். பத்து பேரைக் காணவில்லை என்று அங்குள்ள ‘கொம்பாஸ்’ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
மலேசியாஇந்தோனீசியாவெள்ளம்நிவாரணம்மரணம்