சோல்: போதைப்பொருள் தயாரிப்பிலும் கடத்தலிலும் ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில் தாய்லாந்தைச் சேர்ந்த 16 பேரைத் தென்கொரிய அதிகாரிகள் கைதுசெய்தனர்.
ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்ற விசாரணையையடுத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கைதுசெய்யப்பட்டோரில் எட்டுப் பேர்மீது உடனடியாகச் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இந்நடவடிக்கையின் தொடர்பில், 26,000க்கும் மேற்பட்ட போதை மாத்திரைகளையும் கிட்டத்தட்ட ஒரு கிலோ தூள் வடிவ மூலப்பொருளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு 1.4 பில்லியன் வொன் (S$1.35 மில்லியன்) ஆகும்.
இந்தத் தூள் மூலப்பொருள் கடல்வழியாகத் தென்கொரியாவுக்குள் கடத்தப்பட்டதாகத் தெரியவந்தது. அதனை மாத்திரை அழுத்தும் இயந்திரத்தைப் பயன்படுத்தி மாத்திரையாக மாற்றும் தளத்தையும் அக்கும்பல் அமைத்ததாகக் கூறப்பட்டது.
சோல் நகரில் உள்ள தென்கொரியாவிற்கான தாய்லாந்து பண்பாட்டு மன்றத்தின் தலைவர் ஷெரிலின் இயூன் இது குறித்துப் பதிவிட்டுள்ளார்.
தென்கொரியாவில் மூலப்பொருளைக் கொண்டு போதை மாத்திரை தயாரிக்க முயன்றது இதுவே முதன்முறை என அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடெங்கும் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கும் தாய்லாந்து நாட்டவருக்கும் விற்பனை செய்வதற்காக அந்தப் போதைப்பொருள்கள் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. அவை தாய்லாந்திலிருந்து கடத்தல்காரர்கள், விநியோகிப்பாளர்கள் மூலமாக அவர்களைச் சென்றடைந்தன.
இத்தகைய செயல்களில் ஒருபோதும் ஈடுபட வேண்டாம் என்றும் பெருந்தொகை, விநியோக வேலை வாய்ப்புகள் ஆகியவற்றுக்கு மயங்க வேண்டாம் என்றும் தாய்லாந்து நாட்டவரை மன்றத் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்தகைய செயல்களில் ஈடுபடுவோர், கடத்தல்காரர்களுக்கு உடந்தையாக இருந்ததாகப் கருதப்பட்டு, கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அவர் எச்சரித்தார்.
