பேங்காக்: செப்டம்பர் மாதம் 16ஆம் தேதியிலிருந்து தாய்லாந்தைப் பாதித்துள்ள வெள்ளத்தில் குறைந்தது எட்டுப் பேர் மாண்டுவிட்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலைநகர் பேங்காக்கில் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நகரில் கனமழை பெய்ததைத் தொடர்ந்து கடந்த வார இறுதியில் அது பேரிடராக அறிவிக்கப்பட்டது என்று அரசாங்கம் திங்கட்கிழமை (செப்டம்பர் 28) கூறியது.
கிழக்கு மாநிலங்களில் உயிரிழப்பு
உயிரிழந்த எட்டுப் பேரும் சா கேய், சந்தான்புரி சராபுரி ஆகிய தாய்லாந்தின் கிழக்கு மாநிலங்களில் மாண்டனர் என்று தாய்லாந்தின் பேரிடர் தடுப்பு, தவிர்ப்புப் பிரிவு (டிடிபிஎம்) தெரிவித்தது. அது மேல்விரங்கள் எதையும் வழங்கவில்லை.
பேங்காக்கில் காணப்படும் நிலவரத்தைக் கருத்தில்கொள்ளாதபோது 27 மாநிலங்களில் 500,000க்கும் மேற்பட்ட குடும்பங்களும் 1.7 மில்லியன் மக்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக டிடிபிஎம் கூறியது.
பேங்காக்கில் பலர் வெளியேற்றம்
இந்நிலையில், பேங்காக்கில் ஆயிரக்கணக்கானோர் திங்கட்கிழமை பாதுகாப்பு முகாம்களில் தஞ்சம் புகுந்தனர்.
பேங்காக்கின் பல்வேறு பகுதிகள் தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. கிழக்கு மாநிலம் ஒன்றில் நீர்த்தேக்கங்களில் நீரின் அளவு அதிகரித்ததால் வீடுகளிலிருந்து வெளியேறுமாறு சிலருக்கு உத்தரவிடப்பட்டது.
சில குடியிருப்புப் பகுதிகள் ஒட்டுமொத்தமாகப் பாதிக்கப்பட்டன. சென்ற வாரம் இரண்டு, மூன்று நாள்களில் 320 மில்லிமீட்டர் அளவு மழை பெய்ததைத் தொடர்ந்து இந்நிலை ஏற்பட்டது.
செப்டம்பர் 16லிருந்து தாய்லாந்தில் வெள்ளத்தால் 41 மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தால் நாடு முழுவதும் குறைந்தது 11 பில்லியன் பாட் (418 மில்லியன் வெள்ளி) மதிப்பிலான பொருளியல்ரீதியான சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் நிலைமை மேம்படாவிட்டால் இழப்பு தொடர்ந்து அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை காலை நிலவரப்படி பல சாலைகள் வெள்ள நீரில் மூழ்கியிருந்ததாக பேங்காக் போஸ்ட் ஊடகம் தெரிவித்தது. வெள்ளத்தால் பேங்காக்கில் 700,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பேங்காக் போஸ்ட் குறிப்பிட்டது.
பொருளியல் இழப்பு
தென்கிழக்காசியாவின் இரண்டாவது ஆகப்பெரிய பொருளியலான தாய்லாந்து, கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் காலத்துக்குப் பிறகு வட்டார அளவில் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் பின்தங்கியுள்ளது. இவ்வாண்டு இரண்டாம் காலாண்டில் ஆண்டு அடிப்படையில் அதன் பொருளியல் 1.9 விழுக்காடு வளர்ச்சியடைந்தது.
எனினும், முந்தைய காலாண்டில் பதிவான 2.8 விழுக்காட்டு வளர்ச்சியைக் காட்டிலும் அவ்விகிதம் குறைவாகும்.
