பெய்ஜிங்: சீனாவின் தென்மேற்குப் பகுதியில் வெள்ளிக்கிழமை (ஜூலை 17) ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது எட்டுப் பேர் உயிரிழந்துவிட்டனர் என்றும் குறைந்தது 34 பேரைக் காணவில்லை என்றும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவரும் வேளையில், சீன அதிபர் ஸி ஜின்பிங் விரிவான சோதனைகளை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.
சொங்சிங் மாநிலம், பெங்ஷுய் மாவட்டத்தில் உள்ளூர் நேரப்படி காலை 9:10 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு 800க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்.
உள்ளூர்த் தலைவரான ரென் ஸிஜியாங், இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 18 பேர் மீட்கப்பட்டதாகவும் அவர்களில் எட்டுப் பேர் இறந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
அரசாங்க ஊடகமான சிசிடிவி வெளியிட்ட காட்சிகளில், அப்பகுதியில் உள்ள ஒரு மலையடிவாரத்தில் இருக்கும் குடியிருப்பு, வணிகச் சாலையின் ஒரு பகுதியை பெரும்பாறைகளும் மண்ணும் மூடியிருப்பது தெரிந்தது.
மேலும், அந்த ஊடகம் ஒளிபரப்பிய காட்சிகளில் தூசுப் படலத்தைக் கண்டு மக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடுவதும் பதிவாகியிருந்தது.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி கணிக்க முடியாத, செங்குத்தான நிலப்பரப்பைக் கொண்டது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும், மலையின் பக்கவாட்டுப் பகுதிகளில் இன்னும் ஆபத்தான பாறைகள் இருப்பதாகவும் அவர் சொன்னார்.

