தேர்தல் தோல்வி: டிரம்ப் மீது பாயும் குற்றச்சாட்டுகள்; கட்சிக்குள் மோதல்

தேர்தல் தோல்வி: டிரம்ப் மீது பாயும் குற்றச்சாட்டுகள்; கட்சிக்குள் மோதல்

கோப்புப் படம்: ஏஎஃப்பி

05 Nov 2026 - 7:03 pm

2 mins read

வாஷிங்டன்: அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஆளும் குடியரசுக் கட்சி வரலாற்றுப் படுதோல்வியைச் சந்தித்துள்ளதைத் தொடர்ந்து, அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் தலைமைத்துவம் மீது சொந்தக் கட்சியினரே கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைக்கத் தொடங்கியுள்ளனர்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் ஜனநாயகக் கட்சி கைப்பற்றியுள்ள நிலையில், குடியரசுக் கட்சிக்குள் உட்கட்சிப் பூசல் வெடித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை (நவம்பர் 3) நடைபெற்ற தேர்தலில் குறைந்தபட்சம் ஏழு செனட் இடங்களைக் குடியரசுக் கட்சி இழந்தது. பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சி 258 இடங்களையும் குடியரசுக் கட்சி 177 இடங்களையும் கைப்பற்றியுள்ளது.

டெக்சாஸ், தெற்கு கரோலினா, கன்சாஸ் போன்ற பாரம்பரியக் குடியரசுக் கட்சிக் கோட்டைகளும் பறிபோயின. தோல்வியைத் தொடர்ந்து தற்போதைய சபாநாயகர் மைக் ஜான்சன், 2027 தொடக்கத்தில் பதவியிலிருந்து விலகப்போவதாக அறிவித்துள்ளார்.

இத்தோல்விக்கு ஈரான் போர், வாழ்க்கைச் செலவின உயர்வு, இஸ்ரேலுடனான உறவுகளே காரணம் என்று துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் புதன்கிழமை தமது நீண்ட சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டார்.

வெளிநாடுகளில் அமெரிக்கா தலையிடுவதை வான்ஸ் நீண்டகாலமாகக் கேள்விக்கு உட்படுத்தி வந்துள்ளார். அவர் 2028ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிடக்கூடும் எனக் கருதப்படும் நிலையில், மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள போரில் இருந்து தம்மை விலக்கிக்கொள்ள இந்த அறிக்கையின் மூலம் அவர் முனைவதாக அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

குறைந்த எண்ணெய் விலை

ஜே.டி. வான்ஸின் கருத்துக்குப் பிறகு அனைத்துலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 100 அமெரிக்க டாலருக்கும் கீழே குறைந்து, இரண்டு மாதங்களில் இல்லாத அளவுக்குச் சரிந்துள்ளது.

ஃபுளோரிடா ஆளுநர் ரான் டிசாண்டிஸ் இந்த முடிவுகளைக் “கட்சிக்கு ஏற்பட்டுள்ள பேரழிவு” என வர்ணித்ததுடன், நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசு நிர்வாகமும் பங்கு வணிகத்தில் ஈடுபடத் தடை விதிக்க வேண்டும் எனக் கூறி டிரம்ப்பை மறைமுகமாகத் தாக்கினார்.

செனட்டர் ஜான் கோர்னின், முன்னாள் அதிபர் வேட்பாளர் மிட் ரோம்னி ஆகியோரும் டிரம்ப்பின் போர்த் திட்டம், வரிக் கொள்கைகள், முறைகேடுகளே கட்சியின் பின்னடைவுக்குக் காரணம் எனச் சாடினர்.

எனினும் இத்தோல்வியைத் தமக்கான பின்னடைவாகக் கருதவில்லை என்று அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

ஈரான் போர் தேர்தலைப் பாதித்ததை ஒப்புக்கொண்டாலும், தற்காப்பு அமைச்சர் பீட் ஹெக்செத்தை மாற்றும் எண்ணம் இல்லை என்றும், நிர்வாகத்தில் பெரும் மாற்றங்கள் நிகழாது என்றும் தெரிவித்தார்.

இரு அவைகளிலும் பெரும்பான்மை கிடைத்துள்ளதால், டிரம்ப் அரசின் சட்ட மசோதாக்களை முடக்குவதுடன் பல்வேறு நாடாளுமன்ற விசாரணைகளையும் முன்னெடுக்க ஜனநாயகக் கட்சி திட்டமிட்டுள்ளது.

அதிகாரம் இழந்த டிரம்ப்

டிரம்பின் தன்னிச்சையான அதிகாரம் முடிவுக்கு வந்துள்ளது. எஞ்சிய இரண்டாண்டு ஆட்சிக் காலத்தில் அதிகார உத்தரவுகளை மட்டுமே அவர் அதிகம் சார்ந்திருக்க வேண்டும்.

இதுநாள் வரை போர், பரஸ்பர வரி, விசா மறுப்பு என நினைத்தது எல்லாவற்றையும் நிறைவேற்றி வந்த டிரம்ப், இனி எந்தச் சட்டத்தையும் நிறைவேற்ற முடியாது.

சமூக வலைத்தளங்களில் டிரம்ப் தான் பேசுபொருளாகியுள்ளார். ‘டிரம்பின் மீம் தினம்’ என்று அமெரிக்கர்கள், தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் ஏராளமான மீம்ஸ்களை பகிர்ந்து வருகிறார்கள்.

குறிப்புச் சொற்கள்