தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அவசரகால நிர்வாகப் பிரிவு மறுஆய்வு: குழு அமைத்த அதிபர் டிரம்ப்

2 mins read
21271349-003c-4a29-9142-ca96392ca866
பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள நார்த் கெரோலைனா, கலிஃபோர்னியா ஆகிய மாநிலங்களுக்கு ஜனவரி 24ஆம் தேதியன்று அதிபர் டிரம்ப் பயணம் மேற்கொண்டபோது கூட்டரசு அவசரகால நிர்வாகப் பிரிவை முழுமையாக மாற்றி அமைப்பது அல்லது கலைப்பது குறித்து பரிசீலித்து வருவதாகத் தெரிவித்தார். - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: அமெரிக்காவின் கூட்டரசு அவசரகால நிர்வாகப் பிரிவு செயல்படும் விதத்தை மறுஆய்வு செய்ய புதிய குழு ஒன்றை அதிபர் டோனல்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 26) அமைத்தார்.

அக்குழுவில் அவசரகால நிர்வாகத்துடன் தொடர்புடைய கூட்டரசுத் தலைவர்களும் சில முக்கியத் தனிநபர்களும் அடங்குவர்.

அரசாங்கத்தில் இடம்பெறாத இவர்களை அதிபர் டிரம்ப் தேர்ந்தெடுத்தார்.

குழு அமைக்கப்பட்டு 90 நாள்களுக்குள் முதல் பொதுக்கூட்டத்தை நடத்தும்படி புதிய குழுவுக்கு அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.

முதல் கூட்டம் நடத்தப்பட்டு 180 நாள்களுக்குள் அறிக்கையைத் தம்மிடம் சமர்ப்பிக்கும்படி அவர் குழுவுக்கு உத்தரவிட்டார்.

பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள நார்த் கெரோலைனா, கலிஃபோர்னியா ஆகிய மாநிலங்களுக்கு ஜனவரி 24ஆம் தேதியன்று அதிபர் டிரம்ப் பயணம் மேற்கொண்டபோது கூட்டரசு அவசரகால நிர்வாகப் பிரிவை முழுமையாக மாற்றி அமைப்பது அல்லது கலைப்பது குறித்து பரிசீலித்து வருவதாகத் தெரிவித்தார்.

அந்த இரு மாநிலங்களிலும் நிவாரணப் பணிகளை அப்பிரிவு சரியாகச் செய்யவில்லை என்று அதிபர் டிரம்ப் குறைகூறினார்.

பேரிடர் ஏற்பட்டால் அவசரகால நடவடிக்கைகளை அந்தந்த மாநிலங்களே பார்த்துக்கொள்ள அவற்றுக்கு நிதி வழங்கும் அணுகுமுறையை விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

கூட்டரசு அவசரகால நிர்வாகப் பிரிவு அரசியல் பாரபட்சத்தைக் காட்டியதாகவும் குடியேறிகள் தொடர்புடைய திட்டங்களுக்கு நிதியைப் பயன்படுத்தியதாகவும் அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டினார்.

இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு மீட்புப் பணியாளர்கள், மீட்புப் பணிக்குத் தேவையான சாதனங்கள், அத்தியாவசியப் பொருள்கள் போன்றவத்தை அனுப்பிவைப்பது கூட்டரசு அவசரகால நிர்வாகப் பிரிவின் பொறுப்பாகும்.

கடந்த சில ஆண்டுகளாகக் கடும் வானிலை காரணமாக அமெரிக்காவில் உள்ள பல இடங்களில் பேரிடர் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாகக் கூட்டரசு அவசரகால நிர்வாகப் பிரிவின் சேவைகளுக்கான தேவை அதிகரித்துள்ளது.

எனவே, அதற்கு ஒதுக்கப்படும் தொகை அதிகரித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்