ஜகார்த்தா: இந்தோனீசியா, தன்னை மதிக்காத நாடுகளுக்கு எரிசக்தி ஏற்றுமதியை நிறுத்தக்கூடும் என்று அந்நாட்டின் மூத்த அமைச்சர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
அண்டை நாடுகளுடனான எரிவாயு ஏற்றுமதி ஒப்பந்தங்களை இந்தோனீசியா புதுப்பிக்காது என்பதற்கான சாத்தியக்கூறுகளை சுட்டிக்காட்டிய மறுநாளான வியாழக்கிழமை (அக்டோபர் 22) அவர் அவ்வாறு கூறியுள்ளார்.
இந்தோனீசியா தனது இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும் தேசிய நலன்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அதிபர் பிரபோவோ சுபியாந்தோ அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து அமைச்சரின் கருத்து வந்துள்ளது.
மரியாதை கொடுக்கத் தவறும் நாடுகளுடனான எரிசக்தி ஏற்றுமதி ஒப்பந்தங்கள் மறுபரிசீலனை செய்யப்படும் என்று எரிசக்தி உருமாற்றத்திற்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் பஹ்லில் லஹாடாலியா தெரிவித்தார். எந்த நாட்டையும் அவர் பெயர் குறிப்பிடவில்லை.
நாடுகளுக்கு இடையிலான கருத்துவேறுபாடுகளுக்குப் பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்வுகாணப்பட வேண்டும் என்று எரிசக்தி, கனிமவள அமைச்சருமான திரு பஹ்லில் கூறினார். ஜகார்த்தாவில் எரிவாயு உற்பத்தி நிலையத்தின் தொடக்க நிகழ்ச்சியில் அவர் பேசினார்.
தற்போது ஒப்பந்தம் இல்லாவிட்டாலும் இந்தோனீசியாவைச் சமமாக நடத்தும் நாடுகளுடன் எரிசக்தி ஏற்றுமதி உடன்பாடுகளைச் செய்துகொள்ளத் தயாராய் இருப்பதாகத் திரு பஹ்லில் தெரிவித்தார்.
“அண்டை நாடுகளுக்கான எரிவாயு ஏற்றுமதியை நீட்டிப்பது குறித்தும் நான் யோசிக்கிறேன். ஏனெனில் உள்நாட்டுத் தேவைகளை நாம் நிறைவேற்றியாக வேண்டும்,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்தோனீசியா, சென்ற ஆண்டில் ஜப்பான், சீனா, சிங்கப்பூர், தென்கொரியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு இயற்கை எரிவாயுவை ஏற்றுமதி செய்தது.
இந்தோனீசியாவின் மத்திய புள்ளியியல் அமைப்பு வெளியிட்ட தரவுகளின்படி, ஜப்பான் கிட்டத்தட்ட 3.8 மில்லியன் டன்னைப் பெற்றது. அதற்கு அடுத்த நிலையில் சீனா (3.79 மில்லியன் டன்), சிங்கப்பூர் (3.22 மில்லியன் டன்), தென்கொரியா (2.27 மில்லியன் டன்) முதலியவை அதிக அளவில் எரிவாயுவை இந்தோனீசியாவிடமிருந்து வாங்கின.
தென்கிழக்காசியாவின் மற்ற இடங்களான தாய்லாந்தும் பிலிப்பீன்சும் முறையே 291,000 டன்னையும் 138,000 டன்னையும் பெற்றன.
