சிங்கப்பூருடனான உறவு முக்கியம்: அமெரிக்க அதிபர் டிரம்ப்

1 mins read
4bf7799b-deaa-4ac8-81c7-230ca1cd201d
சிங்கப்பூருக்கான தூதராக டிரம்ப் பரிந்துரை செய்துள்ள அஞ்சி சின்ஹாவைப் பற்றி அதிகம் கேள்விப்பட்டதில்லை என்று வாஷிங்டனில் உள்ள கவனிப்பாளர்கள் சிலர் கூறுகின்றனர். - படம்: ராய்ட்டர்ஸ்

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், அமெரிக்க தொழில்முனைவரான அஞ்சி சின்ஹாவை சிங்கப்பூருக்கான தூதராக நியமிக்க பரிந்துரை செய்துள்ளார்.

“டாக்டர் அஞ்சி சின்ஹாவை சிங்கப்பூருக்கான அடுத்த தூதராக மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்,” என்று திரு டிரம்ப் தமது டுருத் சோஷியல் பதிவில் மார்ச் 11ஆம் தேதியன்று தெரிவித்திருந்தார்.

“அஞ்சி மிகவும் மதிக்கப்படுகின்ற தொழில்முனைவர். அருமையான குடும்பத்தைக் கொண்டிருக்கிறார்,” என்று அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

“சிங்கப்பூருடனான அமெரிக்காவின் உறவு மிக முக்கியம், மேலும் திரு சின்ஹா நமது நாட்டின் நலன்களை வலுவாக பிரதிநிதிப்பார். அமெரிக்காவை முதலிடத்தில் வைப்பார் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. வாழ்த்துகள் அஞ்சி,” என்று அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

டாக்டர் சின்ஹா சமூக ஊடகங்களில் அல்லது பொதுவெளியில் அதிகம் அறிமுகமாகாதவராக உள்ளார். திரு டிரம்ப் பரிந்துரை செய்துள்ள சின்ஹாவை அதிகம் கேள்விப்பட்டதில்லை என்று வாஷிங்டனில் உள்ள பெரும்பாலான கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

சீனாவுக்கான தூதராக ஜார்ஜியாவின் முன்னாள் செனட்டர் டேவிட் பெர்டியூ, ஜப்பானுக்கான தூதராக வங்கி, சொத்து முதலீட்டுப் பின்னணியைக் கொண்ட ஓரிகான் வர்த்தகர் ஜார்ஜ் கிளாஸ் உள்ளிட்டோர் இதுவரை ஆசியாவுக்கான உயர் அரசதந்திரப் பதவிகளுக்கு முன்மொழியப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் சின்ஹாவுக்கும் செனட் சபை ஒப்புதல் அளிக்க வேண்டும். அதன்பிறகு அவர்களது நியமனம் உறுதியாகும்.

குறிப்புச் சொற்கள்