பேங்காக்: தாய்லாந்தின் புக்கெட் அனைத்துலக விமான நிலையத்தில் புதன்கிழமை (ஜனவரி 14) தரையிறங்கவிருந்தபோது எட்டிஹாட் ஏர்வேஸ் விமானம் ஒன்று காற்றுக் கொந்தளிப்பால் பாதிக்கப்பட்டது.
இதில் விமானத்தில் இருந்த பயணிகள் பலருக்குக் காயம் ஏற்பட்டதாகத் தகவல்கள் கூறின. விமானத்தில் 160 பயணிகள் இருந்தனர்.
EY416 விமானம் முற்பகல் 11.30 மணிக்குத் தரையிறங்குவதற்கு வானில் வட்டமிட்டுக்கொண்டிருந்தபோது காற்றுக் கொந்தளிப்பு ஏற்பட்டதாக புக்கெட் விமான நிலையம் தெரிவித்தது.
காயமுற்ற பயணிகளுக்கு உதவ விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக் கோபுரத்தை விமானி தொடர்புகொண்டார்.
முற்பகல் 11.51 மணிக்கு விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியதும் காயமடைந்தோருக்கு உதவ விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக விரைந்தனர்.

