ஹனோய்: ஐரோப்பிய ஒன்றியமும் வியட்னாமும் தங்களுக்கிடையிலான உறவை மேம்படுத்திக்கொள்ளவிருப்பதாக ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வரும் வியாழக்கிழமை (ஜனவரி 29) ஐரோப்பிய மன்றத் தலைவர் அன்டோனியோ கொஸ்டா வியட்னாம் தலைநகர் ஹனோய்க்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். அப்போது இருதரப்பு உறவு மேம்படுத்தப்படும் என்று அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
அமெரிக்க வரிவிதிப்பால் இடையூறுகள் ஏற்பட்டுள்ள நிலையில் இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
வியட்னாமின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவராக, தற்போது அப்பதவியை வகிக்கும் தோ லாம் கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 23) மேலும் ஒரு தவணைக் காலத்துக்கு நியமிக்கப்பட்டார். அதற்குப் பிறகு திரு லாமைச் சந்திக்கவிருக்கும் முதல், முக்கிய நாடு அல்லது கூட்டமைப்பின் தலைவராக திரு கொஸ்டா விளங்கக்கூடும்.
வியட்னாமுடனான உறவை மேம்படுத்திக்கொள்வதற்கான திட்டம் பல மாதங்களாக வரையப்பட்டு வந்ததாகவும் குறிப்பாக நேரச் சிக்கல்கள் காரணமாக அது தள்ளிப்போடப்பட்டதாகவும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி தெரிவித்தார். அவர் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை.
இந்நடவடிக்கையைத் தொடர்ந்து வியட்னாமுடனான உறவைப் பொறுத்தவரை சீனா, அமெரிக்கா, ரஷ்யா ஆகியவற்றுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படக்கூடிய நிலைக்கு ஐரோப்பிய ஒன்றியம் உருவெடுக்கும். அதோடு, வியட்னாம் மேம்பட்ட பங்காளித்துவத்தைச் செய்துகொள்ளும் தரப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

