பாரிஸ்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் கேலி, அவமதிப்பு பேச்சுக்கு அமைதி காத்து வந்த ஐரோப்பியத் தலைவர்கள் அவருக்கு எதிராக தங்களுடைய கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
முதல் நபராக பிரான்ஸ் அதிபர் இமானுவல் மக்ரோன் டிரம்ப்பை வியாழக்கிழமை (ஏப்ரல் 2) கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஈரானுக்கு எதிரான போர் அக்கறையற்ற அணுமுறை என்றும் நேட்டோவை அதிபர் டிரம்ப் பயனற்ற வகையில் தாக்கிப் பேசுவதாகவும் மக்ரோன் குறிப்பிட்டுள்ளார்.
“நாங்கள் முந்தைய நாள் சொன்னதற்கு நேர்மாறாக சொல்ல மாட்டோம்,” என்று தென்கொரியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள திரு மக்ரோன் கூறினார்.
அதிபர் டிரம்ப் மாற்றி மாற்றி பேசுவதை இது குறிப்பதாகக் கருதப்படுகிறது.
“நாங்கள் போரைப் பற்றி தீவிரமாக பேசி வருகிறோம். போரில் ஈடுபட்டுள்ள ஆண்களும் பெண்களும் கொல்லப்படுவது குறித்து கவலைப்படுகிறோம். போரில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதைப் பற்றி பேசுகிறோம்,” என்றும் மக்ரோன் தெரிவித்தார்.
அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடங்கிய ஈரானுக்கு எதிரான போரில் ஐரோப்பியத் தலைவர்கள் தலையிடாமல் இருக்கின்றனர்.
ஈரான் போரை நேட்டோ ஆதரிக்காததால் அந்தக் கூட்டமைப்பு ஒரு முட்டாள்தனமான செயலை செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் கூறியிருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
அதுமட்டுமல்லாமல் ஐரோப்பியத் தலைவர்களை அவர் கோழைகள் என்றும் வருணித்திருந்தார்.
பின்னர் நேட்டோவின் உதவி தமக்குத் தேவையில்லை என்றார் அவர்.
ஈரானுக்கு எதிரான தாக்குதல்களை அமெரிக்காவும் இஸ்ரேலும் தீவிரப்படுத்த விரும்புகின்றன. ஆனால் அவற்றின் போர் விமானங்கள் தங்களுடைய நாட்டின் ஆகாயவெளியையும் படைத் தளங்களையும் பயன்படுத்த நேட்டோ அனுமதிக்கவில்லை. இதனால் ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பதற்றம்அதிகரித்துள்ளது.
அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடான பிரிட்டனும் அமெரிக்காவை ஆதரிக்காமல் ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.
ஹோர்முஸ் நீரிணையை வெற்றிகரமாக ஈரான் முடக்கிவிட்டதால் ஐரோப்பிய நாடுகள்தான் அந்த நீரிணையின் போக்குவரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்திருந்தார்.
ஆனால் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் ஏப்ரல் 2ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்ட தொலைபேசி உரையாடலில் பங்கேற்ற ஐரேப்பியத் தலைவர்கள் ஹோர்முஸ் நீரிணையை பலவந்தமாகக் கைப்பற்ற வேண்டும் என்ற அவரது கோரிக்கையை நிராகரித்துவிட்டனர்.
“அது, நாங்கள் தேர்ந்தெடுப்பதற்கான பாதையல்ல. நாங்கள் உண்மையான நிலவரத்தை அறிந்து செயல்படுகிறோம். அவ்வழியாகச் செல்லும் கப்பல்கள் ஈரான் தாக்குதலுக்கு உள்ளாகும்,” என்று மக்ரோன் தெரிவித்தார்.

