விலை உயர்ந்த டுரியான் பழங்கள் பினாங்கில் களவாடப்பட்டன

விலை உயர்ந்த டுரியான் பழங்கள் பினாங்கில் களவாடப்பட்டன

ஆண்டுக்கு 550,000 டன் டுரியான் பழங்கள் மலேசியாவில் உற்பத்தியாகின்றன
படம்: ஏஎஃப்பி

10 Jul 2026 - 10:55 am

2 mins read

கெப்பாலா பத்தாஸ்: மலேசியாவில் டுரியான் பழங்களின் பருவம் தற்போது உச்சத்தில் உள்ளது. சிங்கப்பூரிலும் பலரால் விரும்பி உண்ணப்படும் பழ வகைகளில் டுரியானும் ஒன்றாகும்.

தென்கிழக்காசியாவில் பல நாடுகளில் வளரும் டுரியான் மரங்களில் கிடைக்கும் ‘முசாங் கிங்’ என்ற பழ வகை மிகவும் விலை உயர்ந்தது. அதனைச் சீனாவுக்கு மலேசியா அதிகமாக ஏற்றுமதி செய்கிறது. ஒரே ஆண்டில் 550,000 டன் அளவில் டுரியான் பழங்கள் மலேசியாவில் உற்பத்தியாகின்றன.

மலேசியாவில் தற்போது டுரியான் பழ விளைச்சல் பருவம். ஆதலால், அதன் சில்லறை விலை குறைந்துள்ளது. இருப்பினும், கருப்பு முள்களைக் கொண்ட ‘பிலேக் தார்ன்’ என்ற ஒருவகை டுரியான் பழங்கள் நிறைந்த கூடைகள் பினாங்கு வியாபாரி ஒருவரின் கடையில் இருந்து திருடப்பட்டுள்ளன.

வெனி ஊய் என்ற 27 வயது கடை உரிமையாளர், ஜூன் மாதம் 25, 29ஆம் தேதிகளில் இருமுறை, தமது குடும்பம் நடத்திவரும் பழக்கடையில் விலை உயர்ந்த டுரியான் பழக்கூடைகள் களவாடப்பட்டதாகத் தெரிவித்தார்.

ஆறு ஆண்டுகளுக்குமுன் அவரது குடும்பம் டுரியான் வியாபாரத்தைத் தொடங்கியது. அங்குப் பழங்கள் திருடப்படுவது இதுவே முதன்முறை என்று வியாழக்கிழமை (ஜூலை 9) அவர் கவலையுடன் தெரிவித்தார்.

கடையில் கண்காணிப்புக் கேமராக்கள் உள்ளன. அவற்றில் பதிவான காணொளிகளில், திருடர்கள் பழக்கூடைகளை எடுப்பதையும் கடைக்கு வெளியில் காத்திருந்த வாகனத்தில் அவற்றை ஏற்றிச் செல்வதையும் காணமுடிந்தது.

இரண்டாம் முறை திருடர்கள் கடையில் நுழைந்தபோது அவர்களில் ஒருவர் கையில் கத்தியுடன் இருந்ததாகத் திருவாட்டி வெனி கூறினார்.

திருட்டுச் சம்பவங்களுக்குப் பிறகு, அவரது குடும்பம் காவல்நாய்களை அங்கு அதிகப்படுத்தியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இதேபோன்று மற்ற டுரியான் வியாபாரிகளின் பண்ணைகளிலும் திருட்டுச் சம்பவங்கள் நடந்துள்ளன.

குறிப்புச் சொற்கள்