நீலாய்: நெகிரி செம்பிலானில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து மேம்பட்ட வெடிக்கும் கருவிகள் (IED) என நம்பப்படும் மூன்று பொருள்களை மலேசியக் காவல்துறை கண்டுபிடித்தது.
அப்பகுதியில் டிசம்பர் 22ஆம் தேதி முற்பாதியில் வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய தீவிரத் தேடுதல் வேட்டையில் அப்பொருள்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது.
நீலாயில் உள்ள தேசா பால்மா அடுக்குமாடி குடியிருப்பின் வாகன நிறுத்துமிடத்தில் டிசம்பர் 22ஆம் தேதி அதிகாலை 7 மணியளவில் வெடிப்புச் சம்பவம் ஒன்று நடந்ததாகத் தங்களுக்குத் தகவல் கிடைத்தது என நெகிரி செம்பிலான் காவல்துறைத் தலைவர் அல்சாஃப்னி அகமது தெரிவித்தார்.
மேலும், சம்பவ இடத்தில் ஆணிகள் சிதறிக் கிடப்பதாகப் புகார் அளித்தவர் தங்களிடம் கூறியதாக அவர் விவரித்தார்.
எனவே அதுகுறித்து விசாரிக்க அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அளித்த தகவலின்படி, வெடிப்பு கார் ஒன்றில் நடந்ததாக நெகிரி செம்பிலான் காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
அந்த வாகனத்திலிருந்து வெடிப்புக்குக் காரணமாகக் கருதப்படும் சில பொருள்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.
வெடிப்புக்குக் காரணமானவர்களை அடையாளம் காண காவல்துறை தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் உள்ள குடியிருப்பிலிருந்து மேம்பட்ட வெடிக்கும் கருவிகள் (IED) என அறியப்படும் மூன்று பொருள்களை அதிகாரிகள் கைப்பற்றியதாகக் காவல்துறை தலைவர் தெரிவித்தார்.
சம்பவம் குறித்து ஊகங்கள் எதையும் பரப்ப வேண்டாம் எனப் பொதுமக்களைக் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
டிசம்பர் 22ஆம் தேதி அதிகாலை நடந்த வெடிப்புச் சம்பவத்தால், தேசா பால்மா குடியிருப்பில் வசிப்போர் பீதியடைந்ததாக மலேசிய மலாய் மொழி நாளிதழான சினார் ஹரியான் செய்தி வெளியிட்டது.

