பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் முன்னணி மருந்தகங்களின் பெயரையும் சின்னத்தையும் பயன்படுத்தி, போலி இணையத்தளங்கள் மூலம் போலியான மருத்துவப் பொருள்களை விற்பனை செய்யும் போக்கு அதிகரித்து வருவதாக மருந்தக உரிமையாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஷா ஆலம், கோத்தா கெமுனிங்கில் மருந்தகம் நடத்தி வரும் ரேச்சல் கான் என்பவர், தமது மருந்தகத்தைப் போன்றே வடிவமைக்கப்பட்ட ஒரு போலி இணையத்தளத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
“அந்தத் தளம் அச்சு அசலாக எங்களுடையதைப் போலவே இருந்தது. பெயரில் ஒரே ஓர் எழுத்து மட்டுமே சிறிய மாற்றத்துடன் இருந்தது. மலேசியாவில் பதிவு செய்யப்படாத மருத்துவப் பொருள்கள் அதன்வழியாக விற்பனை செய்யப்படுவதை அறிந்தோம்,” என்று திருவாட்டி ரேச்சல் சொன்னார்.
‘அல்ப்ரோ’ போன்ற பெரிய மருந்தகக் குழுமங்களும் இத்தகைய மோசடிகளால் பாதிக்கப்பட்டுள்ளன.
“கடந்த ஓராண்டாக இது தீவிரமடைந்துள்ளது. எங்கள் வணிக முத்திரைப் பெயர், சின்னத்தை அப்படியே பயன்படுத்தி போலிப் பொருள்கள் விற்கப்படுகின்றன. அவற்றின் தரம், உள்ளடக்கம் குறித்து நாங்கள் அச்சமடைந்துள்ளோம்,” என ‘அல்ப்ரோ’ மருந்தகத்தின் நிபுணத்துவப் பராமரிப்பு, மேம்பாட்டு மேலாளர் இங் யி லிங் கூறினார்.
‘பிரெகோ லைஃப் சயின்சஸ்’ நிறுவனத்தின் மேலாளர் கிளாரிஸ் வோங் கூறுகையில், போலியான தயாரிப்புகள் 30 முதல் 40 விழுக்காடு குறைவான விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவித்தார்.
“அந்தத் தயாரிப்புகளில் போலியான ‘ஹாலோகிராம்’ வில்லைகளும் ஒட்டப்பட்டுள்ளன. ஆனால், அவற்றை வருடியபோது அவை பதிவு செய்யப்படவில்லை என்பது தெரியவந்தது. இத்தகைய போலியான மருந்தை உட்கொண்ட வாடிக்கையாளர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது,” என்று அவர் எச்சரித்தார்.
உயிருக்கே உலை வைக்கலாம்
தரம் குறைந்த அல்லது தீங்கு விளைவிக்கும் பொருள்களை எடுத்துக்கொள்வது உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என்பதால், இணையத்தளங்கள் விற்பனையாளர்களை அனுமதிக்கும் முன் முறையான ஆய்வு செய்ய வேண்டும் என மலேசிய மருந்தகச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அதுபோல, அதிகத் தள்ளுபடியில் விற்கப்படும் பொருள்களை வாங்கும்போது விழிப்புணர்வுடன் இருக்கும்படி பொதுமக்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

