மணிலா: குடியேறிகளுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளால் அந்நாட்டில் உள்ள பிலிப்பீன்ஸ் சமூகத்தினர் பதற்றம் அடைந்துள்ளனர்.
அதிபர் டிரம்ப் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளால் நிரந்தரவாச அந்தஸ்து கேட்டு வெளிநாட்டவர்கள் சமர்ப்பித்துள்ள விண்ணப்பங்கள் கிடப்பில் உள்ளன.
விண்ணப்பத்தின் முடிவுகளுக்காகக் காத்துக்கொண்டிருக்கும்போது அமெரிக்காவில் தங்க அனுமதிக்கப்பட்ட விசா காலாவதி அடைந்தால் அவர்கள் சட்டவிரோதக் குடியேறிகளாகக் கருதப்படுவர்.
அத்தகையோர் அமெரிக்காவிலிருந்து அவர்களது சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பிவைக்கப்படுவர்.
இது அமெரிக்க நிரந்தரவாச அந்தஸ்துக்காகக் காத்திருக்கும் பிலிப்பீன்ஸ் சமூகத்தினரிடையே கவலை, பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜனவரி 20ஆம் தேதியன்று அமெரிக்காவின் அதிபராக அதிபர் டிரம்ப் பொறுப்பேற்றார்.
அமெரிக்க எல்லைகள் தொடர்பான கொள்கைகளை அவர் கடுமையாக்க பல உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.
விசா வழங்கும் முறைகள் இறுக்கப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
சட்டவிரோதக் குடியேறிகளைப் பிடித்து நாடு கடத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அகதிகளை ஏற்றுக்கொள்ளும் முறையும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் குழந்தைப் பெற்றெடுத்தால் அந்தக் குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கும் முறையை முடிவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
ஆனால் இந்த நடவடிக்கை நடப்புக்கு வருவதை அமெரிக்க நீதிமன்றங்கள் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளன.
2022ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்காவில் ஏறத்தாழ 350,000 பிலிப்பீன்ஸ் சமூகத்தினர் தகுந்த விசா இல்லாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தகவலை அமெரிக்க உள்துறை அமைச்சு வெளியிட்டது.
2022ஆம் ஆண்டு நிலவரப்படி 4.1 பிலிப்பீன்ஸ் அமெரிக்கர்கள் அங்கு இருப்பதாக அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்புப் பிரிவு கூறியது.
இந்நிலையில், அதிபர் டிரம்ப் மேற்கொள்ளும் கடுமையான நடவடிக்கைகளின் விளைவாக குடியேறிகள் நியாயமற்ற வகையில் நடத்தப்படக்கூடும் என்று அமெரிக்காவில் உள்ள பிலிப்பீன்ஸ் சமூகத்தினரின் தலைவர் ஜெனிவீவா ஜோப்பாண்டா அச்சம் தெரிவித்தார்.
“யாரும் பாதுகாப்பாக இல்லை,” என்று திருவாட்டி ஜோப்பாண்டா கூறினார்.

