பேங்காக்: தாய்லாந்தில் சுற்றுப்பயணிகள் செல்லும் படகு ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) தீ முண்டது.
இச்சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததாக பேங்காக் போஸ்ட் போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கோ தாவ் தீவின் மீட்பு நிலையத்திலிருந்து சுராட் தானி நகரில் உள்ள தாய்லாந்து கடல்துறை அமலாக்க தளபத்தியத்துக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 9.25 மணிக்குத் சம்பவ அறிக்கை (distress report) வந்தது. ‘டேவி ஜோன்ஸ் லாக்கர்’ எனும் சுற்றுப்பயப் படகில் தீ மூண்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
அப்படகில் 22 பேர் இருந்தனர். அவர்கள் முக்குளிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளச் சென்றுகொண்டிருந்தனர்.
அதிகாரிகள் உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கினர். கோ தாவிலிருந்து தென்கிழக்கு பினக்கல் (கோங் ஹின் துங் கூ) பகுதியில் வட்டாரத்தில் உள்ள முக்குளிப்புப் பகுதிக்குப் பயணிகள் சென்றுகொண்டிருந்தனர்.
படகில் இருந்த 22 பேரில் 16 பேர் பயணிகள், இருவர் படகு ஊழியர்கள். மற்ற இருவர் முக்குளிப்புப் பயிற்றுவிப்பாளர்கள், அவர்களின் உதவியாளர்கள்.
தீ அணைக்கப்பட்ட பிறகு படகில் இருந்த சுற்றுப்பயணிகளில் ஒருவரைக் காணவில்லை என்று தெரிய வந்தது. காணாமற்போனவர் அலெக்சாண்டிரா கிளார்க், 26, எனும் பிரிட்டனைச் சேர்ந்த பெண் என அடையாளம் காணப்பட்டார்.
சம்பவத்தில் அவர் கொல்லப்பட்டதாக பின்னர் செய்தி வெளியானது.