வாஷிங்டன்: போரால் உருக்குலைந்துள்ள காஸாவின் மறுநிர்மானத்துக்கென அமைதிக்குழுவை உருவாக்கும் திட்டம் கடந்த 2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முன்மொழியப்பட்டது.
இவ்வாண்டு ஜனவரியில் சுவிட்சர்லாந்தில் நடந்த உலகப் பொருளியல் மாநாட்டில் அக்குழு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அக்குழுவின் தலைவராக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் பொறுப்பேற்றார்.
அமைதிக் குழுவின் முதல் சந்திப்புக் கூட்டம் வியாழக்கிழமை (பிப்ரவரி 19) வாஷிங்டனில் நடந்தது. அக்கூட்டத்தில் உரையாற்றிய அதிபர் டிரம்ப், காஸாவின் மறுநிர்மான நிதிக்கு உலக நாடுகள் S$8.8 பில்லியன் (US$7 பில்லியன்) வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.
அதன் பங்காக அமெரிக்கா S$12.6 பில்லியன் (US$10 பில்லியன்) கொடுக்கும் என்பதையும் திரு டிரம்ப் தமது உரையில் குறிப்பிட்டார்.
மறுநிர்மானத் திட்டம், ஹமாஸ் போராளிகள் ஆயுதங்களைக் கைவிட்டு, இஸ்ரோலுடன் அமைதியை நிலைநாட்டினால்தான் சாத்தியப்படும். அதற்கு அதிபர் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்த நிலையில், ஹமாஸ் குழுக்கள் ஆயுதங்களைக் களைந்தாலும் இஸ்ரேல் காஸாவின் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் என்று அஞ்சுகின்றனர். இஸ்ரேலியப் பிரதமர் நெட்டன்யாகு, ஹமாஸ் சரண் அடையாவிட்டால் போர் தொடரும் என்று மிரட்டிவருகிறார்.
காஸா பிரச்சினை தவிர்த்து, உலகில் நடக்கும் பல பூசல்களுக்கும் அமைதிக் குழு உதவும் என்ற அதிபர் டிரம்பின் கருத்தைப் பல நாடுகள் சந்தேகத்துடன் பார்க்கின்றன. ஐக்கிய நாட்டு நிறுவனத்துக்குப் பதிலாக அமைதிக் குழு செயல்படாது என்பதை நிலைநாட்ட அதிபர் டிரம்ப், ஐநாவை வலுப்படுத்துவது முக்கியம் என்று தமது உரையில் குறிப்பிட்டார்.
காஸாவில் காற்பந்து சார்ந்த நடவடிக்கைகளை அறிமுகப்படுத்த, அனைத்துலகக் காற்பந்து சம்மேளனம் (ஃபிஃபா) S$95 மில்லியன் (US$75 மில்லியன்) நிதி வழங்கும் என்பதையும் மனிதாபிமான உதவிகளுக்கென ஜக்கிய நாட்டு நிறுவனம் S$2.5 பில்லியன் (US$2 பில்லியன்) வழங்கும் எனவும் அதிபர் டிரம்ப் தமது உரையில் அறிவித்தார்.
காஸா அமைதிக் குழுவில் இஸ்ரேல் இடம்பெற்றாலும் பாலஸ்தீனம் பிரதிநிதிக்கப்படவில்லை என்பது கவனத்துக்குரியது.

