பெட்டாலிங் ஜெயா: மலேசியத் தீபகற்பத்தில் மேற்குக் கடலோரப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழையும் திடீர் வெள்ளமும் ஏற்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, தலைநகர் கோலாலம்பூர் போன்ற நகரப் பகுதிகள் பாதிப்படையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏப்ரல் மாதத்தில் பருவமழைக் காலத்தின் வருகையால் இந்நிலை ஏற்படக்கூடும் என்று கூறப்படுகிறது.
வடகிழக்குப் பருவமழைக்காலம் முடிய இருக்கும் நிலையில், ஏப்ரல் மாதத்தில் இந்தப் பருவமழைக் காலம் தொடங்க இருக்கிறது.
இது வடகிழக்குப் பருவமழைக் காலத்துக்கும் ஜூன் மாதம் தொடங்கும் தென்மேற்கு பருவமழைக் காலத்துக்கும் இடைப்பட்டிருக்கும்.
தென்மேற்குப் பருவமழைக்காலத்தின்போது வறண்ட வானிலை ஏற்படும் என்றும் வெப்பமாக இருக்கும் என்றும் பருவநிலை நிபுணர் ஃபிரெடோலின் டாங்காங் தெரித்தார்.
குறிப்பாக, மலேசியாவில் மட்டுமல்லாது, இந்தோனீசியாவின் சுமத்ராவிலும் கலிமந்தானிலும் காட்டுத் தீ ஏற்பட்டால் இந்நிலை ஏற்படும் என்றார் அவர்.
“தண்ணீரை வீணாக்கக்கூடாது அதைச் சேமிக்க வேண்டும் என்று மலேசியர்களிடம் வலியுறுத்த வேண்டும். தண்ணீர் சேமிப்பு, மறுசுழற்சி ஆகியவற்றை ஊக்குவிக்க நீர்க் கட்டணத்தை உயர்த்துவது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும்,” என்று சுல்தான் மிசான் தென்துருவ ஆய்வு அறநிறுவனத்தைச் சேர்ந்த பருவநிலை, வானிலை நிபுணர் டாக்டர் அஸிஸான் அபு சமா தெரிவித்தார்.

