பூக்கரெஸ்ட்: ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் பேரிடர் மீட்பு நிதியுதவியைப் பெறுவதற்கு அத்தியாவசிய வெள்ளத் தடுப்புகளை ஏற்படுத்த ருமேனியா தனது உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவுள்ளது.
அதற்கென குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கான உள்நாட்டு நிதியை அது ஒதுக்க திட்டமிட்டுள்ளது என்று ருமேனியச் சுற்றுச்சூழல் அமைச்சர் டையானா புசொயானு கூறியுள்ளார் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 4) செய்தி வெளியிட்டுள்ளது.
இருபது ஆண்டுகளில் காணாத மோசமான வெள்ளப் பெருக்கை ருமேனியா கடந்த ஆண்டும் இவ்வாண்டும் சந்தித்துள்ளது. அவற்றால் பத்துப் பேர் மாண்டுபோயினர். அத்துடன், கரைபுரண்ட ஆறுகள், இடிந்துவிழுந்த பாலங்கள், பாதிப்படைந்த வீடுகள் என பல இடர்களுடன் அந்நாட்டு மக்கள் போராடிவருகின்றனர்.
ஐரோப்பிய ஒன்றியத்துடன் செய்துகொள்ளப்பட்ட மறுசீரமைப்பு திட்டத்தின்படி, மீட்பு நிதியைப் பெறுவதற்கு 2026 முதல் காலாண்டுக்குள்ளாக ருமேனியா வெள்ளத்தடுப்புக்கென உள்நாட்டுக் கட்டமைப்பு நிதியை ஒதுக்கவேண்டும்.
உலக வங்கி மேற்கொண்ட ஆய்வுகளில் மறுசீரமைப்புப் பணிகளுக்காக ருமேனியாவுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் 10 முதல் 40 பில்லியன் யூரோ மதிப்புள்ள நிதி தேவைப்படும் என்று அமைச்சர் டையானா புசொயானு கூறியுள்ளார். அதைக்கொண்டு அணைகள் வலுவாக்கப்பட்டு, புதிய பாலங்கள் கட்டப்பட்டு, பற்பல வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
சில மாதங்களே ஆட்சியில் உள்ள ருமேனியாவின் கூட்டணி அரசாங்கம், ஐரோப்பாவிலேயே அதிக கடனுள்ள நாடாக தவிக்கிறது. உள்கட்டமைப்பின் மறுசீரமைப்பை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் ருமேனியா உள்ளது.


