தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சாபாவில் வெள்ளம், நிலச்சரிவுகள்

2 mins read
ddcf8574-0dc6-4969-b732-593658bd35e2
வெள்ளம் கரைபுரண்டோடிய நிலையில், கிராமவாசிகள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறினர். சிலர் படகுகளில் வெளியேற்றப்பட்டனர். - படம்: சாபா தீயணைப்புப் படை

கோத்தா கினபாலு: மலேசியாவின் சாபா மாநிலத்தில் கனமழை காரணாக நிலச்சரிவுகளும் வெள்ளமும் ஏற்பட்டுள்ளன.

அம்மாநிலத்தின் பல மாவட்டங்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

பேரிடர் பகுதிகளாக பாப்பார் மற்றும் மெம்பாகுட் மாவட்டங்கள் திங்கட்கிழமை (செப்டம்பர் 15) அறிவிக்கப்பட்டன.

வெள்ளம் கரைபுரண்டோடிய நிலையில், கிராமவாசிகள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறினர். சிலர் படகுகளில் வெளியேற்றப்பட்டனர்.

பல வட்டாரங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நகரில் உள்ள மலைப்பகுதிகளிலும் செபங்கார் மற்றும் பெனாம்பாங்கைச் சுற்றியுள்ள பகுதியிலும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

டாமாய், லுயாங், பெனாம்பாங், பியூஃபோர்ட், பாப்பார் போன்ற தாழ்வான நிலப்பகுதிகளில் உள்ள குடியிருப்புப் பேட்டைகளிலும் வர்த்தக இடங்களிலும் வெள்ளம் புகுந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்டுள்ள இடங்கள் சேறும் சகதியுமாக உள்ளன. இருப்பினும், தொடர் கனமழை காரணமாகத் துப்புரவுப் பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

வெள்ளம் ஏற்பட்டுள்ள இடங்களில் குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளது. சாபாவின் கிழக்குக் கடலோரப் பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது.

வெள்ளத்தில் சிக்கித் தவிப்போரை மீட்கும் பணிகளில் சாபாவின் தீயணைப்புப் படை, குடிமைத் தற்காப்புப் படை, காவல்துறை ஆகியவை தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

பாதிக்கப்பட்டோருக்கு உதவ தனிநபர்களுடனும் அரசியல்வாதிகளுடனும் அரசாங்கம் சார்ப்பற்ற அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.

திங்கட்கிழமை (செப்டம்பர் 13) காலை 8 மணி நிலவரப்படி பெனாம்பாங், தவாவ், பியூஃபோர்ட் ஆகிய இடங்களைச் சேர்ந்த 415 பேர் துயர்துடைப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த 415 பேரும் 113 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.

துயர்துடைப்பு முகாம்களில் தங்கவைக்கப்படுவோர் எண்ணிக்கை உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளம், நிலச்சரிவுகள் ஆகியவை காரணமாக சாபாவில் உள்ள பல கிராமங்கள் நிலைகுலைந்துள்ளன. பொருட்சேதம் அதிகம் என்று அஞ்சப்படுகிறது.

மழையின் தீவிரம் குறைந்ததும் மறுசீரமைப்புப் பணிகளில் உடனடியாக இறங்க அதிகாரிகள் தயாராக உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்