கோலாலம்பூர்: கடந்த வார இறுதியில் மலேசியாவின் வடகிழக்கு பகுதியிலும் தாய்லாந்தின் தெற்கு பகுதியிலும் கனத்த மழை பெய்தது.
இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல்லாயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன, போக்குவரத்து கட்டமைப்புகள் பாழாகின, விவசாய நிலங்கள் அழிந்தன, 30க்கும் மேற்பட்டோர் மாண்டனர்.
செவ்வாய் கிழமையும் (டிசம்பர் 3) கனமழை பெய்யும் என்று வானிலை நிலையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.
இந்நிலையில், கிளந்தான் மாநிலத்தின் கடலோர நகரமான தும்பாத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளில் நீர் வடியத்தொடங்கியுள்ளது. அதனால் அவ்வட்டார மக்கள் தங்களது வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.
இருப்பினும் பலரது வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. வெள்ள நீரால் வீட்டின் சுவர்கள் இடிந்துள்ளன. வீடுகளில் உள்ள பல பொருள்கள் மீண்டும் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கின்றன.
வீடுகளில் மின்சாரம் இல்லை, நீர் இணைப்பு இல்லை, கடலுக்கு நடுவில் இருப்பதுபோல் உள்ளதாக மக்கள் கவலை தெரிவித்தனர்.
கனமழை காரணமாக மலேசியாவில் மட்டும் 6 பேர் மாண்டனர். பாதுகாப்பு காரணங்கள் கருதி கடந்த வாரம் 150,000க்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டதாக மலேசிய அரசாங்கத் தரவுகள் கூறுகின்றன.
செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி முகாம்களில் இருப்போர் எண்ணிக்கை 95,000க்கு கீழ் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இருப்பினும் இவ்வாரத்தில் கனமழை பெய்ய அதிக வாய்ப்புகள் இருப்பதால் மலேசிய அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளனர்.
இவ்வாரம் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என்றும் மலேசிய வானிலை நிலையம் முன்னுரைத்துள்ளது.
தாய்லாந்தில் நிலைமை சற்று மோசமாக உள்ளது. அங்கு கனமழை காரணமாக 25 பேர் மாண்டனர். 300,000 மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
டிசம்பர் 3ஆம் தேதி முதல் டிசம்பர் 5ஆம் தேதி வரை நாட்டின் தெற்கு பகுதியில் கனமழை பெய்யும் என்றும் அதனால் திடீர் வெள்ளம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக தாய்லாந்து வானிலை நிலையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.