இஸ்லாமாபாத் / புதுடெல்லி: இந்தியா, அதன் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் வட்டாரத்தில் பெரிய அணைகளின் எல்லாக் கதவுகளையும் புதன்கிழமை (ஆகஸ்ட் 27) திறந்துவிட்டுள்ளது.
அந்த வட்டாரத்தில் பெய்த கனமழையைத் தொடர்ந்து ஆறுகளில் கட்டப்பட்டுள்ள அணைகளிலிருந்து இந்தியா தண்ணீரைத் திறந்துவிட்டது. அதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் வரக்கூடும் என்று பாகிஸ்தானுக்குப் புதுடெல்லி எச்சரிக்கை விடுத்தது. இந்திய அரசாங்கத் தரப்பின் நம்பத்தகுந்த வட்டாரம் அந்தத் தகவலை வெளியிட்டது.
எச்சரிக்கையைப் பெற்றுக்கொண்டதைப் பாகிஸ்தான் உறுதிப்படுத்தியது. இந்தியாவிலிருந்து நாட்டுக்குள் வரும் மூன்று ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடக்கூடும் என்ற அபாய எச்சரிக்கையை எல்லைப் பகுதியில் வசிப்போருக்கு விடுத்ததாகப் பாகிஸ்தான் சொன்னது.
அண்மை வாரங்களில் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மிதமிஞ்சிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா, அதன் அணைகள் நிரம்பும்போது அவற்றைத் திறந்துவிடுவது வழக்கம்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் வெள்ளநீரின் அளவு அபாயகரமான உயரத்தை எட்டக்கூடும் என்று கூறப்படுகிறது. கனமழையாலும் இந்தியா அணைகளைத் திறந்துவிடுவதால் வரக்கூடிய மிதமிஞ்சிய நீராலும் நிலைமை மோசமாகக்கூடும் என்று கருதப்படுகிறது. பாகிஸ்தானின் மக்கள்தொகையான சுமார் 250 மில்லியனில் கிட்டத்தட்ட பாதிப் பேர் பஞ்சாப் மாநிலத்தில் வசிக்கிறார்கள்.

