தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிலிப்பீன்சில் வெள்ளம்; ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

1 mins read
ee474f62-6a44-44d1-a674-1af630e966c6
பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் வெள்ளம் நிறைந்த சாலையில் வாகனம் ஒன்றைத் தள்ளிச்செல்லும் சிறுவன். - படம்: ஏஎஃப்பி

மணிலா: பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். குறைந்தது இருவரைக் காணவில்லை என்று நம்பப்படுகிறது.

இரவு முழுதும் பெய்த மழையால், ‘மரிக்கின்னா‘ ஆற்றங்கரையில் வெள்ளம் பெருக்கெடுத்தோடியது. அதனால், மணிலாவிலும் அதைச் சுற்றியுள்ள மாநிலங்களிலும் உள்ள பள்ளிகளும் அரசாங்க அலுவலகங்களும் மூடப்பட்டன.

ஆற்றுக்கு அருகில் வசிக்கும் 23,000க்கும் அதிகமானோர் ஒரே இரவில் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் பள்ளிகள், கிராம மண்டபங்கள் ஆகியவற்றில் தஞ்சம் புகுந்தனர்.

குவேஸோன், கலூக்கன் நகரங்களிலிருந்து மேலும் 44,000 பேர் வெளியேற்றப்பட்டனர்.

கடந்த ஜூலை 18ஆம் தேதியிலிருந்து பிலிப்பீன்சை உலுக்கிவரும் ‘விப்பா’ சூறாவளி தாக்கியது முதல், குறைந்தது ஆறு பேர் உயிரிழந்தனர். மேலும், அறுவரைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

வாரயிறுதி வரை மழை தொடரும் என்று பிலிப்பீன்சின் தேசிய வானிலைச் சேவை முன்னுரைத்துள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் பிலிப்பீன்சுக்கு அருகிலோ பிலிப்பீன்சையோ குறைந்தது 20 சூறாவளிகள் தாக்கும். அவற்றால், நாட்டின் மிக ஏழ்மையான பகுதிகள் அதிகம் பாதிக்கப்படுகின்றன.

பருவநிலை மாற்றத்தால் உலகவெப்பமயமாதல் அதிகரிப்பதால், மோசமான சூறாவளிகள் மேலும் சக்திவாய்ந்தவையாக மாறுகின்றன.

குறிப்புச் சொற்கள்