ஜோகன்னஸ்பர்க்: தென்னாப்பிரிக்காவில் கரைபுரண்டோடும் வெள்ளம் காரணமாகப் பலர் மாண்டுவிட்டனர். பல வீடுகள் அழிந்துவிட்டதாக தென்னாப்பிரிக்க அரசாங்கம் தெரிவித்தது.
இந்தப் பெரு வெள்ளத்தை தேசிய பேரிடராகத் தென்னாப்பிரிக்கா அறிவித்துள்ளது.
கடந்த பல வாரங்களாகத் தென்னாப்பிரிக்காவைக் கனமழை, புயல்கள் ஆகியவை புரட்டிப்போட்டு வருகின்றன.
தென்னாப்பிரிக்காவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள லிம்போபோ, எம்புமலாங்கா மாநிலங்களில் வெள்ளம் காரணமாக 30க்கும் மேற்பட்டோர் மாண்டுவிட்டனர்.
ஆறுகளில் நீர் நிரம்பி வழிந்தது. இதன் காரணமாக அண்டை நாடான மொசாம்பிக்கிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோர் அவதியுற்று வருகின்றனர்.
தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பிரமுகர்கள் சிலர் மொசாம்பிக்கில் சென்றுகொண்டிருந்தனர். அவர்களது காரை வெள்ளம் அடித்துச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
அவர்களைத் தேடி மீட்கும் பணிகளைத் தென்னாப்பிரிக்கா முடுக்கிவிட்டுள்ளது.
உயிர் பிழைத்தோரையும் சடலங்களையும் மீட்கும் பணிகளை அதிகாரிகள் தொடர்கின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
சில இடங்களில் வெள்ளம் வடியத் தொடங்கிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
உலகப் புகழ்பெற்ற குரூகர் தேசிய பூங்காவும் அவற்றில் அடங்கும்.
வெள்ளம் காரணமாக அவ்விடம் ஜனவரி 15ஆம் தேதியன்று மூடப்பட்டது.
வருகையாளர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
மொசாம்பிக்கில் வெள்ளத்திலிருந்து தப்பிக்க கூரைகள், மரங்கள் ஆகியவற்றின் மீது பலர் ஏறி நிற்பதால், அவர்களை மீட்கும் பணிகள் மெதுவடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
வெள்ளத்திலிருந்து தப்பிக்க வீட்டின் கூரை மீது ஏறிய கர்ப்பிணி ஒருவர் அங்கேயே குழந்தையைப் பெற்றெடுத்ததாக ஊடகங்கள் தெரிவித்தன.
டிசம்பர் 21ஆம் தேதியிலிருந்து இதுவரை வெள்ளம் காரணமாக அந்நாட்டில் குறைந்தது எட்டு பேர் மாண்டுவிட்டதாக அதிகாரபூர்வத் தரவுகள் தெரிவிக்கின்றன.
பலரை இன்னும் காணவில்லை. எனவே, மாண்டோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
மொசாம்பிக்கில் வெள்ளம் காரணமாக 173,000க்கும் மேற்பட்டோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜனவரி 16ஆம் தேதியன்று அந்நாட்டின் அரசாங்கம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

