டிரம்ப் வந்துசென்றதைத் தொடர்ந்து ரஷ்ய அதிபரும் சீனா செல்கிறார்

டிரம்ப் வந்துசென்றதைத் தொடர்ந்து ரஷ்ய அதிபரும் சீனா செல்கிறார்

2 mins read
056172a0-cdb7-427c-9711-008d7b2b17e8
பெய்ஜிங் செல்லும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் புதன்கிழமை (மே 20) சீன அதிபரைச் சந்தித்துப் பேச உள்ளார். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

பெய்ஜிங்: சீன அதிபர் ஸி ஜின்பிங் தமது பழைய தோழரான ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினை வரவேற்கத் தயாராகி வருகிறார்.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வந்து சென்ற ஒருவார காலத்தில் சீனாவுக்கு ரஷ்ய அதிபர் செல்கிறார்.

வர்த்தகப் பதற்றம், போர், எரிசக்தி நெருக்கடி ஆகியவற்றால் உலகம் சிரமத்தில் சிக்கி இருக்கும் வேளையில் தன்னை ஒரு நிலையான சக்தியாகக் காட்டிக்கொள்ள சீனா முயன்று வரும் நிலையில் உலகின் இருபெரும் தலைவர்களின் வருகை அடுத்தடுத்து அமைகிறது.

உக்ரேன் மீதான தாக்குதலை நிறுத்தி போரை முடிவுக்குக் கொண்டு வருமாறு ரஷ்யாவுக்கு சீனா அழுத்தம் கொடுக்க வேண்டும் என மேற்கத்திய நாடுகள் வலியுறுத்தி வரும் நிலையில், அதிபர் புட்டின் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.

எல்லாவிதமான காலச்சூழ்நிலையிலும் ஒத்துப்போகக்கூடிய தங்களது உறவின் ஒரு சான்றாக அந்தப் பயணத்தை சீனாவும் ரஷ்யாவும் கருதுகின்றன.

தமது 25வது சீனப் பயணமாக செவ்வாய்க்கிழமை (மே 19) பெய்ஜிங் செல்லும் அதிபர் புட்டின் புதன்கிழமை சீன அதிபரைச் சந்திப்பார்.

உக்ரேன்-ரஷ்ய மோதலில் சீனா தன்னை ஒரு நடுநிலையாளராகக் காட்டிக்கொள்ள விரும்புகிறது. அதேவேளை, மேற்கத்தியத் தடைகளை எதிர்கொள்ளும் ரஷ்யா சீனாவுடன் கூடுதல் எரிசக்தி ஒப்பந்தங்களைத் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது.

சீனாவும் ரஷ்யாவும் ஒன்றின் நலனை மற்றொன்று ஆதரிப்பதாக திரு புட்டின் கூறியுள்ளார்.

ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகள், இருதரப்பு நம்பிக்கை மற்றும் புரிந்துணர்வின் அடிப்படையில் இதுவரை இல்லாத உச்சத்தைத் தொட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சென்ற வாரம் அதிபர் டிரம்ப் சீனா வந்துசென்றது ஒரு சாதகமான தோற்றத்தை ஏற்படுத்தினாலும் அந்தப் பயணத்தின்போது முக்கியமான வர்த்தக உடன்பாடுகள் குறிப்பிடத்தக்க அளவில் எட்டப்படவில்லை.

குறிப்புச் சொற்கள்