முன்பணம் செலுத்தாத வெளிநாட்டு நோயாளிகள்: மலேசியா விசாரணை

முன்பணம் செலுத்தாத வெளிநாட்டு நோயாளிகள்: மலேசியா விசாரணை

2 mins read
சமூக ஊடகப் பதிவுகளின் உண்மைத் தன்மை சரிபார்க்கப்படவில்லை என்றாலும் குற்றச்சாட்டு கவனமாக விசாரணைக்கு உட்படுத்தப்படும்.
bba271bd-49db-4a7e-8544-191fd14fdd95
ஜோகூர் பாருவில் இயங்கும் ரெஜன்சி ஸ்பெஷலிஸ்ட் மருத்துவமனையின் வெளிப்புற வளாகத் தோற்றம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

புத்ராஜெயா: சில வெளிநாட்டினர் மலேசிய மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெறுவதற்கு முன்பணம் செலுத்த வேண்டிய நிர்வாக விதியை மீறுவதாக வெளிவந்துள்ள குற்றச்சாட்டை அரசாங்கம் விசாரிக்கப்போவதாக சுகாதார அமைச்சர் சுல்கிப்ஃலி அஹமது ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 15) செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். கோலாலம்பூரில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றிய தாதி ஒருவர் கடப்பிதழ்கள் இல்லை என்று பொய் சொல்லி சில வெளிநாட்டினர் மருத்துவமனையை ஏமாற்றி முன்பணம் செலுத்துவதைத் தவிர்ப்பதாக சமூக ஊடகத்தில் வெளியிட்டதைத் தொடர்ந்து சர்ச்சை உருவானது.

அதனால் தற்போது அமைச்சர் சுல்கிப்லி அரசாங்கத்தின் நிலைப்பாட்டை விளக்க நேரிட்டது.

கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் சமூக ஊடகப் பதிவுகளின் உண்மைத் தன்மை இன்னும் சரிபார்க்கப்படவில்லை என்றாலும் குற்றச்சாட்டு கவனமாக விசாரணைக்கு உட்படுத்தப்படும் என்று விளக்கினார்.

“அதேசமயத்தில் விவரங்களை வெளியிட்டோரின் அடையாளத்தைக் காப்பாற்றும் கடமையும் அவர்களின் கருத்துக்கு மதிப்பளிக்கும் பொறுப்பும் அரசாங்கத்துக்கு உண்டு,” என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

மலேசிய சுகாதார அமைச்சின் விதிகளின்படி, அனைத்து வெளிநாட்டு நோயாளிகளும் பொது மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கு முன்னதாக ஒரு குறிப்பிட்ட தொகையை முன்பணமாகச் செலுத்திய பின்னரே அங்குள்ள படுக்கைகளில் அனுமதிக்கப்படுவர்.

மூன்றாம் நிலை வார்டுகளில் (third-class wards) மருத்துவ சிகிச்சைகளுக்கு S$457.65 ( RM1,400 ரிங்கிட்), அறுவை சிகிச்சைகளுக்கு S$915.30 (RM2,800 ரிங்கிட்) என முன்பணம் இருவகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து அகதிகளாக வருவோர் அதற்கான ஐக்கிய நாட்டு அமைப்பின் அகதிகள் ஆணையரின் அங்கீகாரம் பெற்ற அடையாள அட்டைகளை (UNHCR) வைத்திருந்தால் அவர்களுக்கு முன்பணத்தில் 50 விழுக்காடு கழிவு வழங்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.

வெளிநாட்டு ஊழியருக்கான மருத்துவ, அறுவை சிகிச்சை காப்புறுதித் திட்டங்கள் அல்லது அகதிகளுக்கான மருத்துவக் காப்புறுதித் திட்டங்கள் போன்ற தனிப்பட்ட முன்னேற்பாடுகளைக் கொண்டோருக்கே முன்பணம் கொடுப்பதில் விலக்கு அளிக்கப்படுகிறது என்பதையும் அமைச்சர் சுல்கிப்ஃலி அஹமது தெளிவுபடுத்தினார்.

குறிப்புச் சொற்கள்